கடைமடை பாசனப் பகுதிகளுக்கு இதே போல தண்ணீர் குறைத்தே அனுப்பினால் ஒரு போகம் சாகுபடி கூட செய்ய முடியாத நிலை ஏற்படும். போர்கால அடிப்படையில் கரைகளை பலப்படுத்தி, கிளை வாய்க்கால்களை மராமத்து செய்து தண்ணீரை அனுப்பவில்லை என்றால் விவசாகளை திரட்டி எழுச்சி போராட்டம் நடத்தப்படும் என்று மேற்பனைக்காட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துரைமாணிக்கம் பேட்டி அளித்தார்.
கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. அதனால் மேட்டூர் அணை நிரம்பி அதிக அளவில் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் பல கரையோர கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு வழக்கம் போல தண்ணீர் வரவில்லை என்று விவசாயிகள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக மேட்டூர் அணையில் இருந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலச் செயலாளர் துரைமாணிக்கம் தலைமையிலான குழுவினர் ஆற்றுக்கரை வழியாக ஆய்வுகள் செய்து வருகின்றனர். ஞாயிற்றுக் கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லனை கால்வாய் கடைமடைப் பாசன பகுதிகளாக மேற்பனைக்காடு, வல்லவாரி, நாகுடி வரை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் இந்தக்குழுவினர். இந்த குழுவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும் இந்திய விவசாயிகள் சங்க உறுப்பினருமான மாதவன், திருரங்குளம் ஒன்றியச் செயலாளர் சொர்ணகுமார், அறந்தாங்கி ஒன்றியச் செயலாளர் ராசேந்திரன் மற்றும் பலர் சென்றனர்.
மேற்பனைக்காடு கல்லனை கால்வாயை ஆய்வு செய்த பிறகு துரைமாணிக்கம் செய்தியாளர்களிடம் பேசும் போது.. ஜூலை 19 ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கடைமடைப் பாசனப்பகுதிகளுக்கு சில முறை தண்ணீர் வந்ததுடன் நிறுத்தப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்தி 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுவதால் கடைமடைக்கு தண்ணீர் வராமல் அதிகமாக வரும் தண்ணீர் கடலில் கலக்கிறது. செங்கிப்பட்டிக்கு வடக்கே 7, 8 இடங்களில் கரை பலவீனமாக உள்ளதால் உடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அரசும் அதிகாரிகளும் விவசாயிகள் பிரச்சணையில் கவணம் செலுத்தவில்லை.
அரசு போர்கால அடிப்படையில் செயல்பட்டு ஆறுகள் மற்றும் துணை வாய்க்கால்களை இயந்திரம் உதவியுடனாவது மராமத்து செய்ய வேண்டும். அதாவது கல்லனை கால்வாய் கோட்டம் மராமத்துக்காக ரூ. 2.78 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த இடத்திலும் எந்த பணியும் நடக்கவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். அதனால் தான் இப்போது முழு கொள்ளளவு தண்ணீர் செல்ல முடியாமல் உடைப்பு ஏற்படுகிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் 400 அடிக்கு கீழே சென்றுவிட்டது. இதே நிலை நீடித்தால் ஒரு போகம் சாகுபடி கூட செய்யமுடியாத நிலை ஏற்படும்.
தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மராமத்துப் பணிகளை மேற்கொண்டு கரைகளை பலப்படுத்துவதுடன் ஆறுகளை தூர்வாரி முழு கொள்ளளவில் தண்ணீரை திறக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறையாக திறந்து அந்த தண்ணீரும் வீணாகும் நிலையில் விவசாயிகளை இணைத்து எழுச்சி போராட்டம் நடத்துவோம். மேலும் மேட்டூரில் தூர்வாரததால் ஒரு லட்சம் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வளவு தண்ணீர் இருந்தும் கூட கடைமடைக்கு முறை தண்ணீர் விடப்படுகிறது. அதனால் பாசன குளங்கள், ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை என்றார்.