சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்த உதித் சூர்யா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இவர் 2019-2020-ம் ஆண்டுக்கான ‘நீட்’தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறி, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்றார். கலந்தாய்வின் போது அவருக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைத்தது. அதன்படி, அவர் மருத்துவ படிப்பில் சேர்ந்தார். இந்நிலையில், மாணவர் உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்து ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக புகார் எழுந்தது.
இந்த புகாரை விசாரிக்க மருத்துவ கல்வி இயக்ககம் நான்கு பேராசியர்கள் கொண்ட குழுவை அமைத்தது. அதேபோல் தேனி கண்டமனூர் விளக்கு காவல் நிலையத்தில் மருத்துவ கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. மேலும் தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட மாணவனை கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
இதனால் சென்னையில் உள்ள உதித் சூர்யா மற்றும் அவரின் குடும்பம் தலைமறைவானது. இந்த நிலையில் தான் மாணவர் உதித் சூர்யா முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.