வெள்ளியங்கிரி மலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற பக்தர்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான சுயம்பு ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகையை முன்னிட்டு பக்தர்கள் மகாதீபம் ஏற்றுவது வழக்கம். இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. கார்த்திகை மகா தீபம் ஏற்ற, வருகிற 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை இந்தக் கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதிக்க வேண்டும் என்று திண்டுக்கலைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதையடுத்து, கோவில் கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடிக்கு மேல் உள்ளது. இங்கு தீபம் ஏற்றும்போது, கவனக்குறைவினால் செடி, மரங்களில் தீ பற்றினால், அது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேராபத்தை ஏற்படுத்தும் என்று வனத்துறையினர் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். விசாரணையின் இறுதியில் வெள்ளியங்கிரி மலையில் கார்த்திகையை முன்னிட்டு தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என்று கூறி சரவணன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.