நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பிராணாசாமி என்பவரை மீட்கக் கோரிய வழக்கில் 4 வாரத்திற்குள் பதிலளிக்க ஈரோடு காவல்துறையினர் மற்றும் நித்தியானந்தாவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிடதி என்ற இடத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் என்ற பல் மருத்துவர் கடந்த 2003-ஆம் ஆண்டு சேர்ந்தார். அங்கு அவருக்கு பிராணாசாமி என பெயர் சூட்டப்பட்டது.

சமீபத்தில் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சீடர்கள் தாக்கப்பட்டனர். இதையடுத்து அவரை சந்திக்கச் சென்ற தனக்கு பிடதி ஆசிரமத்தினர் அனுமதி வழங்கவில்லை எனவும், சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை மீட்க கோரியும், அவரது தாய் அங்கம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக 4 வாத்திற்குள் பதிலளிக்க ஈரோடு காவல்துறையினர் மற்றும் நித்தியானந்தாவிற்கு உத்தரவிட்டனர்.