வேலம்மாள் கல்வி குழுமத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக வருமானவரித்துறையினர் ரெய்டு நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நான்காவது தளத்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ளார் குழுமத்தின் தலைவர் முத்துராமலிங்கம்.
மேலும், இவரது செகரட்டரி மற்றும் கேஷியர் ஆகிய இரண்டு பெண்கள் அதே இடங்களில் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். திடீரென, அதிரடியாக வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்துவதற்கு என்ன காரணம் என்று நாம் விசாரித்தபோது, பல்வேறு காரணங்களைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

மருத்துவக் கல்லூரியில் மாணவர்களிடம் டொனேஷன் வசூலித்தது உள்ளிட்ட கணக்கில் வராத பணத்தை கார்களில் பதுக்கி வைத்திருப்பதாக மதுரையில் உள்ள வருமானவரித்துறையினருக்கு புகார் வந்ததால் அந்த அடிப்படையில் இப்படி ஒரு அதிரடி ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக வேலம்மாள் கல்வி குழுமத்தின் வாகனங்களை சோதனையிட்டு கொண்டிருக்கிறார்கள். வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால், இதுகுறித்து வேலம்மாள் கல்வி குழுமத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறது வருமான வரித்துறை. வேலம்மாள் கல்வி குழுமம் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
துணை முதல்வர் ஓபிஎஸ்ஸே கைகட்டி நிற்கக் கூடிய அளவுக்கு செல்வாக்கு வாய்ந்தவர்தான் வேலம்மாள் கல்வி குழுமத்தின் தலைவர் முத்துராமலிங்கம். தன்னுடைய மருத்துவமனையில் பல பேரை வேலைக்கு எடுத்துவிட்டு அதை கணக்கு காட்டி கோடிக்கணக்கில் தனியார் நிறுவனங்களிடம் கடன் வாங்கிவிட்டு காரணங்கள் இல்லாமலேயே அவர்களை விரட்டுவதும் தொடர் கதையாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் நிலவியிருக்கிறது.
மேலும், சமீப காலங்களாக வேலம்மாள் கல்விக் குழுமம் பல்வேறு தனியார் பள்ளிகளை டேக் அவர் செய்து கொண்டிருக்கிறது. அதாவது, தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இவ்வளவு பணம் வேலம்மாள் குழுமத்திற்கு ஏது? இதன் மூலம் கருப்பு பணம் விவகாரம் இருக்கிறதா என்கிற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது . அதாவது, அரசியல்வாதிகளுடைய கருப்புபணம் இதிலேயே வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறதா என்கிற கோணத்திலும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.