திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் பத்திரிகையாளர்கள் பற்றியும், பெண் பத்திரிகையாளர்களையும் மிகவும் அவதூறாக விமர்சித்திருப்பது தமிழ்நாடு முழுக்க பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் நக்கீரன் இணையதளத்திடம் பேசும்போது,
ஆளுநர் பெண் பத்திரிகையாளரிடம் நடந்து கொண்ட விதம் குறித்த பிரச்சனை கிட்டதட்ட முடியும் அளவுக்கு வந்த பின்னர் நடிகர் எஸ்.வி.சேகர் சமூக வலைதளத்தில் மிகவும் கீழ்த்தரமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் குறிப்பிட்ட ஒரு பெண் பத்திரிகையாளரை மட்டும் அவர் இழிவுப்படுத்தி சொல்லவில்லை, ஒட்டுமொத்த பெண் பத்திரிகையாளர்களையும் இழிவுப்படுத்தியுள்ளார். அவர் பதிவிடும்போது மிக நல்ல பதிவு என்றுதான் போடுகிறார். படிக்காமல் அதனை ஷேர் பண்ணிவிட்டேன் என்கிறார்.
முகம் தெரியாத ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிடுவதற்கும், பிரபலமான ஒருவர் பதிவிடுதற்கும் வேறுபாடு உள்ளது. சமூகத்தில் பிரபலமான ஒருவர் படிக்காமல் ஷேர் பண்ணுவதாக கூறுவது பொறுப்பற்ற செயல். அப்படி செய்யக்கூடாது. ஆனால் அவர் படிக்காமல் ஷேர் பண்ணியதாக கூறுவதை ஏற்க முடியாது. ஒரு மலிவான பதிவை போட்டுவிட்டு எதிர்ப்பு வந்தவுடன் நீக்கிவிட்டேன் என்று சொல்வதையும் ஏற்க முடியாது.
தற்போது அவர் மன்னிப்பு கேட்பதாக கூறுகிறார். அதே சமயம் தான் நீக்கிவிட்ட பதிவை இப்போதும் ஸ்கீரின் ஷாட் எடுத்து தொடர்ந்து போட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு கண்டனத்தை தெரிவிப்பதாக கூறுகிறாரே?
பத்திரிக்கையாளர்கள் யாரும் அதனை ஷேர் பண்ணவில்லை. எஸ்.வி.சேகரை ஆதரிக்கக்கூடியவர்கள்தான் இதனை ஷேர் பண்ணுகிறார்கள். இந்த பதிவை போடுவதற்கு முன்பு அவர் யோசித்திருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.