பல்வேறு அவதாரங்களை எடுத்து வந்த மாயாவி சூரபத்மனை கடல் போன்று திரண்டிருந்த மக்களின் முன்னே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என மக்களின் பக்திப் பரவசமெடுக்க வேல் கொண்டு வீழ்த்தினார் செந்தில் வேல் முருகன்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூரில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 6ம் நாளில் உச்ச நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று (18-11-23) தேதியன்று நடந்தது. இதனையொட்டி திருக்கோவிலின் நடை அதிகாலை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், பின்பு 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. ஏற்கனவே கந்தசஷ்டி விழா தொடக்கத்தின்போது ஆலயத்தில் பக்தர்கள் திரளான அளவில் விரதம் மேற்கொண்டனர்.
அன்றைய தினம் அதிகாலையிலேயே ஆலயம் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. காலை 6 மணிக்கு தொடங்கிய யாக சாலையில் 12 மணியளவில் தீபாராதனை நடந்தது. மதியம் ஒரு மணிக்கு மேல் ஜெயந்திநாதர் யாக சாலையிலிருந்த எழுந்தருளியவர் பாடல்கள் முழங்க மேளதாளத்துடன் சண்முகவிலாசம் வந்தடைந்த போது அவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அதன்பின், பிற்பகல் 2 மணிக்கு மேல் சஷ்டி மண்டபத்தில் ஜெயந்தி நாதராக அவதரித்த வேலவனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
இதன்பின் பல்வேறு அவதாரங்களை எடுத்து வருகிற சூரபத்மனை வதம் செய்வதற்காக மாலை 4 மணியளவில் பக்தர்கள் திரள கடற்கரைக்கு ஜெயந்திநாதர் எழுந்தருளினார். கடற்கரையிலோ அலை கடலையும் மறைத்தது மக்கள் தலைகள். ஆரம்பத்தில் கஜமுகன் உருவில் வந்த சூராதிசூரனை வெற்றி கொண்ட ஜெயந்திநாதர், இறுதியில் சுயவடிவாக வந்த சூரபத்மனை மாலை 5 மணியளவில் அன்னை உமையவள் பார்வதி தேவி கொடுத்த சக்தி வேலால் வீரவேல் முருகனுக்கு அரோகரா என பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளக்க சம்ஹாரம் செய்தார் ஜெயந்திநாதர்.
சூரனை சேவல் கொடியாகவும், மயிலாகவும் தனதாக்கி ஏற்றார் முருகப் பெருமான். சூரசம்ஹாரத்தைத் தொடர்ந்து சந்தோஷ மண்டபத்திற்கு எழுந்தருளிய வேல் முருகனுக்கு சிறப்பு அகிஷேகம் அலங்காரங்கள் நடந்தேறின. லட்சக்கணக்கில் திரண்ட மக்களின் பாதுகாப்பு பணிகள் தென்மண்டல ஐ.ஜி நரேந்திர நாயர் தலைமையில் மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணனின் மேற்பார்வையில் விரிவாக மேற்கொள்ளப்பட்டன.