திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஊரடங்கை மீறி சுற்றித் திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி. முத்துச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தியிருக்கிறது. அதைத் தொடர்ந்து திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டு, வெள்ளை விநாயகர் கோயில், நாகல்நகர், மேட்டுப்பட்டி, பேகம்பூர், பழனி ரோடு உள்ளிட்ட பல இடங்களில் டி.ஐ.ஜி. முத்துச்சாமி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் டி.ஐ.ஜி. முத்துச்சாமி பேசும்போது, “கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளற்ற முழு ஊரடங்கு திண்டுக்கல் தேனி மாவட்டங்களில் தீவிரமாக அமல்படுத்தப் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்திரிகை, தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தக் கூடாது, மருத்துவமனைகள், மருந்தகங்கள், கால்நடை மருந்துகள், நாட்டு மருந்து கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், ஏடிஎம் மையங்கள் தவிர மற்ற எந்தக் கடைகளும் நிறுவனங்களும் செயல்படாமல் போலீசார் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மருத்துவ காரணம், இறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து திண்டுக்கல்லுக்கு வாகனங்களில் வருபவர்கள் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். இதனை போலீசார் சோதனை செய்த பின்னரே அவர்களை நகருக்குள் அனுமதிக்க வேண்டும். அதுபோல் குடிநீர் விநியோகம், பத்திரிகை விநியோகம், அத்தியாவசிய பொருட்கள் வேளாண்விளை பொருட்கள் விற்பனையைத் தடுக்கக் கூடாது. சரக்கு வாகனங்களைத் தொடர்ந்து செல்ல அனுமதிக்க வேண்டும். ஓட்டல்களில் காலை 6 மணிமுதல் 10 மணிவரையும், மதியம் 12 மணிமுதல் 3 மணிவரையும் இரவு 6 மணிமுதல் 9 மணிவரை மட்டுமே உணவுப் பொருட்கள் பார்சலில் வழங்க போலீசார் அனுமதிக்க வேண்டும். ஊரடங்கை மீறி சுற்றித் திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்” என்று கூறினார்.