திமுக எம்.பி. டி.ஆர். பாலு வீட்டை நோட்டமிட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (04-06-24) எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாளை வெளிவர இருக்கும் தேர்வு முடிவுக்காகப் பொதுமக்கள் ஆரவமுடன் நாளை விடியலுக்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய சூழலில்தான் சென்னை தியாகாராயர் நகர் ராமர் சாலையில் உள்ள டி.ஆர். பாலு வீட்டை நோட்டமிட்டு படம் பிடித்ததாக ஒரு வாகனத்தை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பிடிபட்டவர்களிடம் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆப்பிள் நிறுவனத்திற்காக சாலைகளைப் படம் பிடித்தது தெரியவந்தது. அதாவது ஆப்பிள் நிறுவனத்தின் மேப் மற்றும் ஸ்ட்ரீட் வியூவுக்காக வீடியோ எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று சென்னையில் பல்வேறு இடங்களிலும் சாலைகளைப் படம் பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இது சம்பந்தமாக 7 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். டி.ஆர்.பாலு திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.