கிருஷ்ணகிரி -ஓசூர் நெடுஞ்சாலையில் அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் கர்நாடக அரசு பேருந்து தீப்பிடித்து எரிந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கிருஷ்ணகிரி குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுந்தரேசன். போலுப்பள்ளியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த உறவினரை காண்பதற்காக இருசக்கர வாகனத்தில் அவரது நண்பர் கணேசனுடன் சென்றுள்ளார். அப்பொழுது கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த கர்நாடக அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பேருந்துக்கு அடியில் இரு சக்கர வாகனம் சிக்கியது. இந்த விபத்தில் சுந்தரேசன் மற்றும் அவருடன் பயணித்த கணேசன் உட்பட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்துச் சிதறியதில் பேருந்து பற்றி எரிந்தது. உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகள் 70 பேரும் அவசர அவசரமாக இறக்கப்பட்டனர். இந்த விபத்தில் அரசு பேருந்து முழுமையாக எரிந்து சேதமானது. இந்தச் சம்பவம் தொடர்பாக குந்தாரப்பள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.