
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மழையூர் பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர் மகன் முருகேசன் (20). இவர் மரம் வெட்டும் தொழிலாளி ஆவார். இவர் இன்று (04.04.2025) இரவு வேலை முடிந்து அதே ஊரில் தனது வீட்டில் இருந்து 200 மீ தூரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று வெளியே வரும் போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மர்ம கும்பல் முருகேசனை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு இனி உயிர் பிழைக்க முடியாது என்பதை உறுதி செய்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கிடந்த முருகேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று பார்த்த போது முருகேசன் உயிர் பிரிந்திருந்தது. அங்கு வந்த போலிசார்உடனே முருகேசன் சடலத்தை புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இளைஞரான முருகேசனை வெட்டி படுகொலை செய்யப்பட்ட தகவல் காட்டுத்தீயாக பரவியதால் அவரது உறவினர்கள் கறம்பக்குடி - புதுக்கோட்டை சாலையில் மழையூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கொலை நடந்ததும் மூடப்பட்ட டாஸ்மாக் கடை கதவுகளை பெண்கள் அடித்து கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் பதற்றமான சூழ்நிலை உருவானதையடுத்து போலிசார் குவிக்கப்பட்டனர். புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா சம்பவ இடத்திற்கு வந்து விசாரனை செய்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முருகேசனின் உறவுக்காரப் பெண்ணை அதே ஊரைச் சேர்ந்த மாற்று இன இளைஞர் காதலித்து அந்த பெண்ணை அழைத்துச் சென்ற நிலையில் பெண்ணை மீட்ட முருகேசன் உறவினர்களை மிரட்ட காதலனுக்கு ஆதரவாக கருப்பட்டிப்படி கிராமத்தில் இருந்து சில இளைஞர்கள் அரிவாள்களுடன் வந்ததையறிந்த முருகேசன் உறவினர்கள் திரண்டதால் அனைவரும் தப்பி ஓடிவிட்ட நிலையில் ஐயப்பன் என்ற ஒரு இளைஞர் மட்டும் அரிவாளுடன் சிக்கிக் கொண்டதால் முருகேசன் உறவினர்கள் ஐயப்பனை கவனித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் ஐயப்பனுக்கு அவமானமும் காதலனுக்கு ஏமாற்றமும் ஏற்பட்ட பகைமை வளர்ந்துள்ளது.
இந்த நிலையில் தான் இன்று முருகேசன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதால் மேற்கண்ட பகையை தீர்த்துக் கொள்ள கூலிப்படை உதவியுடன் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலிசாரின் முதல்கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது. மேலும் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை போலிசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு பக்கம் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சிலரை விசாரனை வளையத்திற்குள்ளும் கொண்டு வந்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்கவில்லை என்றால் சடலத்தை வாங்கமாட்டோம் என்று முருகேசன் உறவினர்கள் கூறி போராட்டத்தில் உள்ளனர். விடியும் முன்பே கொலையாளிகளை கைது செய்யும் பணியில் போலிசார் துரிதமாக இறங்கியுள்ளனர்.