ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் தடுக்க, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு கடிதம் மட்டும் எழுதினால் போதாது என்று தி.க.தலைவர் கி.வீரமணி கூறினார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகிறது. இத்தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் திமுக, திக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக போராடி வருகின்றன. இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூரில் நீட் தேர்வுக்கு எதிரான பரப்புரைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன. 24) நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சேலம் வந்தார்.
அங்கு செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி, ''தமிழகத்தில் நீட் தேர்வினால், மருத்துவப்படிப்பு படிக்க முடியாமல் இதுவரை 8 மாணவிகள் இறந்துள்ளனர். இத்தேர்வில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட மோசடிகள் செய்யும் நிலை உள்ளது. நீட் தேர்வால், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்துவதற்கு முன்பாகவே, தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறது. சமஸ்கிருத மொழியைத் திணிக்கும் வகையில், மத்திய அரசின் கல்விக்கொள்கை உள்ளது.
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது என்பது அவர்களுக்கு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த குழந்தைகள் மீண்டும் படிப்பைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் இருக்கிறது. இதன்மூலம் குலக்கல்வித் திட்டத்தை மீண்டும் கொண்டு வரப்படுவதற்காகவே மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை உருவாக்கி இருக்கிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுக்க, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்குக் கடிதம் எழுதினால் மட்டும் போதாது. இத்திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தில், மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. இந்த விவகாரத்தில், தமிழக முதல்வர் இரட்டை வேடம் போடுகிறார்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு என்பது கேலிக்கூத்தாகிவிட்டது. காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. அதேநேரம், பாஜகவினருக்கு மட்டும் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. பெரியார் பற்றி ரஜினி பேசியது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். அதை அவர் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.