மின் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற அதிமுக போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை விந்தியா பேசுகையில், ''இங்கு ஓராயிரம் பேர் கூடி இருக்கிறோம். நமது எதிர்ப்பு குரல் மதுரையைத் தாண்டி, எல்லையைத் தாண்டி கோட்டைக்குச் சென்று அவர்கள் காதில் கேட்கட்டும். எந்த காட்டுத் தீயாக இருந்தாலும் ஒரு சின்ன தீப்பொறியில் இருந்து தான் ஆரம்பிக்கும். அப்படி சர்வாதிகார ஸ்டாலின் ஆட்சியை சாம்பலாக்க எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆரம்பித்து இருக்கிற சின்ன தீப்பொறி தான் இந்த ஆர்ப்பாட்டம். இன்னைக்கு தமிழ்நாடு முழுக்க இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் எனக்கு இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரையில் கலந்து கொள்வதில் மிகப் பெருமையான விஷயமாக இருக்கு. நியாயத்திற்காக கண்ணகி ராஜாவை எதிர்த்த ஊரு, தமிழுக்காக நக்கீரன் சிவனையே எதிர்த்த ஊரு, மக்களுக்கு நியாயம் தான் முக்கியம், கடவுளே செஞ்சாலும் குத்தம் குத்தம் தான் என நியாயத்திற்காக போராடுகிற மக்கள் வாழ்கின்ற ஊர் இது.
மதுரை என்றாலே தனி பாசம் தான். போராட்டமாக இருந்தாலும், ஆர்ப்பாட்டமாக இருந்தாலும், பொதுக்கூட்டமாக இருந்தாலும் மதுரை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். மதுரை மக்கள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். இது மாமதுரை, மல்லிகை பூ மதுரை, தமிழ் சங்கம் மதுரை, இப்படி மதுரையுடைய பெருமை பேச வேண்டும் என்று நினைத்தால் பேசிக்கொண்டே போகலாம். ஆனால் திமுகவை பற்றி பேசுவதற்கு நிறைய இருக்கு. மதுரை அதிமுகவை பெற்று வளர்த்த அம்மா மாதிரி. எந்த அம்மாவும் எந்த சந்தர்ப்பத்திலும் பெத்த குழந்தையை விட்டுக் கொடுக்காது. அப்படி அதிமுக ஆரம்பித்த பொழுதில் இருந்து அங்க இங்க தூரல் மாதிரி திமுக ஜெயித்திருந்தாலும் அடை மழை மாதிரி அதிமுக ஜெயிச்சு கிட்டே இருக்கு. திருப்பரங்குன்றம் அசுரனை வதம் செஞ்சுட்டு வந்த முருகனுக்கு பெருமை சேர்க்க மக்கள் கல்யாணம் பண்ணி வச்ச ஊரு. அப்படி திமுகவை சாம்பலாக்க போராடும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு இந்த ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக ஏற்பாடு பண்ணி இருக்கிறார் நமது ராஜன் செல்லப்பா. முருகனுக்கு வீரபாகு எப்படியோ அதுபோல் எடப்பாடிக்கு வீர தளபதி ராஜன் செல்லப்பா'' என்றார்.