நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வானவன் மகாதேவி மீனவ கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் செல்வம் என்பவர்களுக்கு சொந்தமான இரு பைபர் படகில் 9 மீனவர்கள் நேற்று இரவு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் 9 பேரும் கோடியக்கரைக்கு அருகே 10 கடல் நாட்டிகல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு அதிவேக படகில் வந்த 4 இலங்கை கடற்கொள்ளையர்கள் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த 9 மீனவர்களையும் தாக்கியுள்ளனர். மேலும் படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, பேட்டரி, செல்போன், 750 கிலோ மீன்பிடி வலை உள்ளிட்ட 3 லட்சம் மதிப்புள்ள மீன் பிடி பொருட்களையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 9 மீனவர்களும் தங்களது படகில் கரை திரும்பி உள்ளனர்.
இதையடுத்து 9 மீனவர்களும் நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத 4 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழிப்பறி, பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வேதாரண்யம் கடலோர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.