திமுக கூட்டணி குறித்த குழப்பங்கள் தற்போது நீடித்து வருகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். டிசம்பர் 10ஆம் தேதி திருச்சிராப்பள்ளியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெறவிருக்கிற தேசம் காப்போம் மாநாடு குறித்தும், கஜா புயலால் ஏற்பட்டிருக்கிற பாதிப்புகள் குறித்தும் திமுக தலைவரோடு, தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்தாய்வு மேற்கொண்டார்.
அங்கே செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன் அவர்கள் “திராவிட முன்னேற்ற கழகத்தோடு விடுதலைச் சிறுத்தைகளுக்கு இடைவெளி இருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை தொடர்ந்து சிலர் திட்டமிட்டு பரப்பிவருகிறார்கள். திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்கள் தொலைக்காட்சி பேட்டியில் மிகவும் எதார்த்தமான முறையிலே சில கருத்துக்களை அவர் பகிர்ந்துகொண்டார். அதற்கு பல்வேறு யூகங்களை திட்டமிட்ட வதந்திகளாக சிலர் பரப்பிவருகின்றார்கள்.
திமுகவோடு விடுதலைச் சிறுத்தைகள் கொண்டிருக்கிற நட்பு என்பது மிகவும் இணக்கமாக உள்ளது, வலிமையாக உள்ளது. மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மிகவும் வலிமையோடு தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதை தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இது புதிய நிலைபாடல்ல கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக இதை முன்னிறுத்தி வருகிறோம். அகில இந்திய அளவில் சனாதன சக்திகள் மீண்டும் வலிமை பெற்றுவிடக்கூடாது ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துவிடக்கூடாது. என்கிற அடிப்படியில்தான் தேசம் காப்போம் மாநாட்டை திருச்சியில் நடத்த இருக்கிறோம். அம்மாநாட்டில் தோழமை கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். அதுகுறித்த கலந்தாய்வுக் கூட்டமாகத்தான் இந்த சந்திப்பு நடந்தது” எனக் குறிப்பிட்டார்.