நாகை அடுத்த நாகூர் பகுதியைச் சேர்ந்த இந்து அமைப்பின் நிர்வாகி தங்கமுத்துகிருஷ்ணன் என்பவரது மனைவி தங்கம் அம்மாள் கடந்த 1995 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவரது நினைவு நாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நாகூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிவசேனா, இந்து மக்கள் கட்சி, இந்து தேசிய கட்சி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து தவறாக, தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த நூற்றுக்கணக்கான வி.சி.க.வினர் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியை நோக்கித் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் திரண்டு இருதரப்பினரும் மாறி மாறி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பான சூழல் நிலவியது.
பின்னர் அர்ஜுன் சம்பத் அங்கிருந்து புறப்பட்ட நிலையில், வி.சி.க.வினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே நாகை எஸ்.பி. ஹர்ஷிங் தலைமையில் ஏராளமான அதிவிரைவுப்படை போலீசார் குவிந்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுக்கூட்டம் நடந்த சிவன் தெற்கு வீதி, பெருமாள் கீழ வீதி, பிடாரி கோவில் தெரு வழியாக எஸ்.பி. ஹர்ஷிங் தலைமையில் அணிவகுத்து சென்ற போலீசார் கூட்டம் கூடாமல் அங்கிருந்த இரண்டு அமைப்பைச் சேர்ந்தவர்களையும் வெளியேற்றினர்.
அதனைத் தொடர்ந்து வி.சி.க. நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமையில் வி.சி.க.வினர் நாகை எஸ்.பி. ஹர்ஷிங்கை நேரில் சந்தித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர். நாகையில் வி.சி.க., இந்து மக்கள் கட்சியினர் மோதிக்கொள்ளும் சூழல் உருவாகி காவல்துறையினர் குவிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.