சமூக வலைதளங்களில் குழந்தை கடத்தல் குறித்த தகவல்கள் வந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. வடமாநில இளைஞர்கள் குழந்தைகளை கடத்துவதாக வரும் தகவல்களால் மக்கள் மிகுந்த பீதியில் உள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து பெண் அடித்து கொலை செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் சுற்றித்திரிந்த ஆண் ஒருவரை குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்று கருதிய கிராம மக்கள் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்ததில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை மேம்பாலத்தின் சுவரில் கட்டி தொங்கவிட்டனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள காட்டுமயிலூர் கிராமத்தில் சுற்றித்திரிந்த வடமாநில பெண் ஒருவரை, குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என கருதி கிராம மக்கள் பிடித்து அடித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேப்பூர் போலீசார், அந்த பெண்ணை அங்கிருந்து மீட்டு அழைத்துச்சென்று விசாரித்தபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. வேலூரை அடுத்த சிங்கிரிகோவில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை, குழந்தையை கடத்த வந்தவர் என நினைத்து சிலர் அடித்து உதைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அந்த வாலிபரை மீட்டனர். அவர், சென்னையைச் சேர்ந்த அமீர் என்றும், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
சமூக வலைத்தளங்களில் வந்த வதந்திகளை உண்மை என்று நம்பி, சந்தேகிக்கும் நபர்களை கொலை செய்யும் அளவிற்கு மக்கள் சென்றுவிடுவதால் குழந்தைகடத்தல் பற்றி தவறான தகவல்களை பரப்புவோருக்கு காவல்துறையும், ஆட்சியர்களும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், மக்கள் மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து,
’’வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது. மக்கள் விழிப்புடன் இருப்பதோடு பொறுப்புடன் இருப்பதும் முக்கியம். சட்டத்தை கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று. காவல்துறையிடம் தெரிவிப்பதே நமது பொறுப்பும் கடமையும் ஆகும்.’’என்று தெரிவித்துள்ளார்.