மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் தூண்டுதலின் பேரில், அவருடைய கூட்டாளியான விருதுநகரைச் சேர்ந்த செந்தில்குமாரை, 2021-ல் சென்னையில் வைத்து வரிச்சியூர் செல்வத்தின் ஆட்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். செந்தில்குமாரின் உடலை வெட்டி தூத்துக்குடி அருகிலுள்ள முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் வீசினர்.
இந்த வழக்கில் ரவுடி வரிச்சியூர் செல்வத்தை விருதுநகர் தனிப்படை காவல்துறையினர் கடந்த 21 ஆம் தேதி கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் வரிச்சியூர் செல்வம் அடைக்கப்பட்டார். அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு விசாரணைக்கு வந்ததைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் வரிச்சியூர் செல்வத்தை ஆஜர்படுத்தினர். மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர் கவிதா, வரிச்சியூர் செல்வத்தை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டு இருந்தார். மேலும், ஜூலை 1 ஆம் தேதி நீதிமன்றத்தில் வரிச்சியூர் செல்வத்தை ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் இன்று போலீஸ் காவல் முடிந்து விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் வரிச்சியூர் செல்வம் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து வரிச்சியூர் செல்வத்தை ஜூலை 5 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.