தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், ஈரோடு தாசில்தார் அலுவலகத்தில், ஈரோடு மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பொதுக் கலந்தாய்வு நடத்தக் கோரி சென்ற 16 -ஆம் தேதியிலிருந்து கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டம் இன்றோடு மூன்றாவது நாளாக தொடர்கிறது. ஈரோடு கோட்டத்திற்கு உட்பட்ட 138 கிராம நிர்வாக அதிகாரிகள் அவர்களின் பணிகளைப் புறக்கணித்து இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று ஈரோடு தாசில்தார் அலுவலகத்தில், ஆர்.டி.ஓ தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது பேசிய ஆர்.டி.ஓ, "ஈரோடு கோட்ட அளவில் மட்டுமே கலந்தாய்வு நடத்த முடியும். வட்டார அளவில் நடத்த முடியாது" எனக் கூறியிருக்கிறார். இதற்கு அந்தச் சங்கத்தினர் மறுப்புத் தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டம் முழுக்க நடைபெறும், கிராம நிர்வாக அலுவலர்களின் மூன்று நாள் காத்திருப்புப் போராட்டத்தால், பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.