Skip to main content

பழங்குடியினப் பெண்ணுக்கு விஏஒ பாலியல் தொந்தரவு; கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

VAO suspended for Misbehaviour of Tribal Woman in viluppuram

 

விழுப்புரம் மாவட்டம், நல்லாபாளையம் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவர் இளம்பெண் கிருத்திகா (28, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடைய கணவர் கடந்த 2014 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்த நிலையில், கிருத்திகாவும் அவருடைய 11 வயது மகனும் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நல்லாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸ் தன்னை பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாக, அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்குச் சென்று புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். 

 

அவர் அளித்த அந்தப் புகார் மனுவில், ‘எனது கணவர் இறந்த நிலையில், கணவரின் இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை உதவித் தொகை வழங்கக் கோரி நல்லாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸிடம் விண்ணப்பம் ஒன்றை அளித்தேன். அப்போது அவர், கணவரின் இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டுமென்றால் ரூ.5,000 லஞ்சம் கேட்டு எனது செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டார். அதன்பின், சில நாட்கள் கழித்து, அவரிடம் ரூ.3,000 கொடுத்து இறப்பு சான்றிதழை பெற்றேன். அதன்பின், அவர் என்னை செல்போனில் தொடர்புகொண்டு விதவை உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறியதால் நான் இ-சேவை மையத்தில் பதிவு செய்தேன். 

 

இதனையடுத்து, என்னை இரவு நேரத்தில் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு தகாத முறையிலும், பாலியல் தொந்தரவும் கொடுத்து வந்தார். அவர் என்னிடம் பேசிய செல்போன் பதிவு ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளேன். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இது குறித்து கண்டாச்சிபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியதாஸை வருவாய் கோட்டாட்சியர் காஜாசாகும் அமீது பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். பழங்குடியின பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்