அண்மையில் பேரவையில், உள் ஒதுக்கீட்டில் வன்னியர் சமூகத்தவர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீட்டில், அதிகப்படியான 10.5 சதவிகிதம் உள் பங்கீட்டாகப் போனதால் மீதமுள்ள 9.5 சதவிகிதத்தில்தான் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள அனைத்து சமூக மக்களும் பங்கீடு செய்துகொள்ள வேண்டிய நிலை. அதாவது சீர் மரபினருக்கு 7.5 சதவிகிதமும் எம்.பி.சி பிரிவினருக்கு 2.5 சதவிகிதம் மட்டுமே என்பதால், அது கடைக்கோடியிலுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு எட்டாத நிலை. இந்த ஒதுக்கீட்டால் தென் மாவட்டத்தில் உள்ள கணிசமான வாக்குவங்கிகளைக் கொண்ட முக்குலத்தோர் சமூக மக்கள் கடுமையான பாதிப்பைச் சந்திக்க நேரிடும் என்பதால், கடும் கொதிப்பில் உள்ளனர். அதனை வெளிப்படுத்தும் வகையில் தங்கள் பகுதிகளில், தெருக்களில் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்த, இடஒதுக்கீட்டுக்கு எதிராகக் கருப்புப் கொடி ஏற்றியுள்ளனர்.
ஆரம்பத்தில், உசிலம்பட்டி கல்லூரி மாணவர்கள், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள இருமன்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள், “உள் ஒதுக்கீட்டில் அதிகப்படியான பங்கீடு வன்னிய சமூகத்தவர்களுக்கு அரசு தந்துவிட்டதால், மீதமுள்ள உள் ஒதுக்கீட்டை அனைத்துப் பிற பிற்படுத்தப்பட்ட மக்கள் பங்கு வைக்க வேண்டிய நிலை. இதனால் மாணவர்கள் எங்களுக்கான கல்வி, தொழில் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் உரிய ஒதுக்கீட்டைப் பெற முடியாத நிலை. எனவேதான் எங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு கருப்புக் கொடி ஏந்திப் போராடுகிறோம்” என்றார்கள்.
இப்படி ஆரம்பத்தில் கிளம்பிய எதிர்ப்பு, நாளுக்கு நாள் விரிவடையத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தின் கழுகுமலை நகரிலுள்ள செம்ம நாட்டார் தேவர் சமுதாய நலச்சங்கத்தினர், தங்களின் தெருக்களில் கருப்பு கொடிகளை ஏற்ற, அதனைப் போலீஸார் அகற்றினர். மேலும், அங்குள்ள மகேஸ்வரன், சரவணன், சிவா, ரமேஷ் என்கிற நான்கு பேர்களின் மீதும் கருப்புக் கொடி ஏற்றியதாக வழக்குப் பதிவுசெய்ய, அது பெரிய விவகாரத்தைக் கிளப்பிவிட்டது.
இதன் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் முக்குலத்தோர் அதிக அளவில் வசிக்கின்ற மணக்காடு நாங்குநேரி, மருகால்குறிச்சி, சூரன்குடி ஆகிய பகுதிகளில் உள் ஒதுக்கீட்டை எதிர்த்துக், கருப்புக் கொடிகளை ஏற்றி தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அதனை வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். தேர்தல் ஆதாயத்திற்காக அவசர அவசரமாக உள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதால், அதற்குத் தேர்தல் வழியாகவே எங்களின் பதிலடி இருக்கும் என்கிறார்கள் நாங்குநேரி வட்டார கிராமத்தினர். உள் ஒதுக்கீடு பிரச்சனை தென்மாவட்டங்களில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.