திருச்சி கிராப்பட்டி மேம்பாலம் பாதியில் நிற்பதற்கு ராணுவ அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன்தான் காரணம் எனச் சட்டப்பேரவை பொதுத் தணிக்கை குழுத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சட்டமன்றப் பேரவை பொதுத் தணிக்கைக் குழு ஆய்வுக் கூட்டம் முடிந்த பிறகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் சட்டபேரவை தணிக்கை குழுத் தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது, “தணிக்கைக் குழுக் கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது. கேட்ட கேள்விகளுக்குத் திருப்திகரமான பதில்களை அதிகாரிகள் மூலம் பெற்றோம். எனவே ஆய்வு திருப்திகரமாக நடந்தது.
கிராப்பட்டி மேம்பாலம் முடிக்கப்படாமல் உள்ளது. காரணம், நிலம் ராணுவத்திற்குச் சொந்தமானது. பொதுப்பணித்துறையில் 110 விதியின் கீழ் ஒரு நிலத்தை ஆர்ஜிதப்படுத்தி பின்னரே வேலைகளைத் தொடங்க வேண்டும். நிர்மலா சீதாராமன் ராணுவ அமைச்சராக இருந்தபோது அந்த வேலையைச் செய்யவில்லை. அதுகுறித்து எங்களுடைய ஆலோசனைகளை வழங்கினோம். மேலும், தமிழகத்தில் பல இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் ராணுவ இடங்களில் மற்றும் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.
இதற்குக் காரணம் பா.ஜ.க.வா எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “பா.ஜ.க பற்றி எனக்குத் தெரியாது” எனப் பதிலளித்தார். மேலும் பத்திரிகையாளர்கள் அரசியல் குறித்த கேள்வியை எழுப்ப, “இது மாவட்ட ஆட்சியர் அலுவலகம்” எனக் கூறி சென்றார்.