திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி முஸ்லிம்பூர், கொல்ல தெரு பகுதியில் வாட்டர் கேன் சப்ளை தொழில் செய்து வருபவர் மதன்குமார். இவர் தன்னுடைய வீட்டின் அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைப்பது வழக்கம். இதேபோல் நேற்று(17.6.2024) வேலைகள் முடித்துவிட்டு இரவு வீட்டின் அருகே பைக்கை லாக் செய்து நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார்.
காலை எழுந்து வெளியில் வந்து பார்த்தபோது வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டின் அருகில் இருந்த மற்றொரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போது, விடியற்காலை நேரத்தில் சந்தேகம் படும்படியான 2 இளைஞர்கள் அந்த தெருவில் நடந்து சென்று நோட்டமிட்டு பின்னர் வீட்டின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை திருடிச் செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
இது குறித்து மதன்குமார் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையாக வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதற்கு முன்பும் இப்படி ஒரு இருசக்கர வாகனம் திருடி சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
வாணியம்பாடி ஆம்பூர் திருப்பத்தூர் பகுதிகளில் தொடர்ந்து வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பது வாகனங்கள் திருடு போவது தொடர் கதையாகி உள்ளது. இதனால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். வீட்டை பூட்டிக்கொண்டு திருமணம், காதுகுத்து, துக்க நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு கூட மக்கள் தயங்கி அச்சமுடன் வாழ்கின்றனர். அதோடு தங்களது இருசக்கர வாகனங்களை வீட்டுக்கு வெளியே நிறுத்த பயப்படுகின்றனர். காவல்துறைக்கு புகார் அளித்தாலும் அவர்கள் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் மெத்தனப்போக்கோடு செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.