புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற இழி செயலை மனித தன்மை கொண்டவர்கள் யாரும் செய்ய மாட்டார்கள். யாரோ மனிதத்தன்மையற்ற சமூக விரோதிகள் செய்துள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேங்கை வயல், இறையூர் கிராம மக்களும், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை நடத்தினர்.
முதலில் புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் பிறகு நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து நேரில் விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி போலீசார் வேங்கைவயல், இறையூர் உட்பட பல கிராமங்களில் உள்ள சந்தேக நபர்களை அழைத்து விசாரணை செய்தனர். தொடர்ந்து செல்போன்கள் ஆய்வு, டிஎன்ஏ பரிசோதனை, குரல் பதிவு சோதனைகளும் நடத்தப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக உறுதி செய்ய வேண்டியுள்ளது. விரைவில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று விசாரணை அதிகாரிகள் கூறி வந்தனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த காவலர் முரளிக்கு சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பி உள்ளனர். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை 11.10 மணிக்கு காவலர் முரளி ராஜா மற்றும் அவருடைய தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகினர். வழக்கறிஞர்கள் வெளியே அமர வைக்கப்பட்ட நிலையில் காவலர் முரளி ராஜாவிடம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்கு மேலாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேங்கைவயல் சம்பவத்தில் கனகராஜ் என்பவர்தான் முதன்முதலில் இது தொடர்பாக 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் சட்டப்பிரிவு 277, 328 உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதே வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி போலீஸ் 494 நாட்களாக விசாரணை செய்துள்ளனர். இச்சூழலில் இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர். இந்நிலையில் புதிய விசாரணை அதிகாரியாக பொறுப்பேற்ற கல்பனா விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளார். இந்த வழக்கில் ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த காவலர் முரளிக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி இன்று விசாரணை நடைபெற்றது. பின்னர் கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமார் வரவழைக்கப்பட்டார். எதற்காக கிராம நிர்வாக அலுவலர் வரவழைக்கப்பட்டார் என்பது தொடர்பான விவரங்கள் தெரியாத நிலையில் தற்பொழுது வரை காவலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.