செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த நிலையில், பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் வேளையில், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த கள்ளச்சாராய விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்,
“சாராயம்
ஒரு திரவத் தீ
கல்லீரல் சுட்டுத்தின்னும்
காட்டேரி
நாம் விரும்புவது
கள்ளச் சாராயமற்ற
தமிழ்நாட்டை அல்ல;
சாராயமற்ற தமிழ்நாட்டை
மாநில அரசு
கடுமை காட்டினால்
கள்ளச் சாராயத்தை
ஒழித்துவிடலாம்
ஒன்றிய அரசு
ஒன்றிவந்தால்
சாராயத்தையே ஒழித்துவிடலாம்”
எனக் குறிப்பிட்டுள்ளார்.