இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்பொழுது சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் துணைமுதல்வர் பன்னீர் செல்வம் பேசுகையில், அ.தி.மு.க அரசு தொடர்ந்து மக்களுக்கான சேவைகளைச் சிறப்பாகச் செய்து வருகிறது. ஆனால் இந்தச் சாதனைகளை எல்லாம் தமிழக மக்கள் பார்க்கிறார்கள், பாராட்டுகிறார்கள், அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சியினரும் இதைப் பார்க்கிறார்கள் ஆனால் பரிதவிக்கிறார்கள். அ.தி.மு.கவிற்கு மக்கள் செல்வாக்குத் தினம் தினம் கூடுகிறது எனப் பதைபதைக்கிறார்கள். அதனால், மனம் பொறுக்க முடியாமல் குமுறுகிறார்கள், குறைசொல்கிறார்கள். ஆனாலும் மூன்றாவது முறையாக நாங்கள் வெற்றிக்கனியைப் பறிப்போம். தேசிய அளவில் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல பிரதமர் மோடி ஆற்றலுடன் செயல்பட்டு வளர்க்கிறார். இனி வரும் தேர்தலிலும் பா.ஜ.க அ.தி.மு.க கூட்டணி தொடரும் என்பதை இந்தக் கூட்டத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்நிலையில், பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி என்பது வேறுவழியில்லாமல் வைக்கப்பட்ட கூட்டணி என வைகோ விமர்சித்துள்ளார். வேறுவழியின்றி பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அ.தி.மு.க அறிவித்துள்ளதாக விமர்சித்துள்ள வைகோ, வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும் எனக் கூறியுள்ளார். மேலும், தி.மு.க கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.