கடந்த ஜனவரி முதலே தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்தது. தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரம், குடிக்க, குளிக்க என எதற்கும் தண்ணீரில்லாமல் தத்தளித்தது. சென்னை மக்களின் நீர் பற்றாக்குறையை போக்க முடிவு செய்த தமிழக அரசு காவிரி நீரை சென்னைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தது.
வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் இருந்து இரயில் மூலமாக சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல முடிவு செய்தனர். இதற்காக தனியாக நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி வேலூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த திமுக ஆட்சியில், ஓக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்துக்கு ராட்சச குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
அந்த தண்ணீரை ஜோலார்பேட்டை அருகில் ராட்சச தொட்டியில் சேமித்து, அங்கிருந்து ரயில் மூலமாக சென்னைக்கு கடந்த இரண்டு மாதங்களாக அனுப்பப்பட்டு வந்தது. இதுவரை 158 முறை ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் ரயில் வேகன் மூலமாக சென்றது. இதன் மூலம் சென்னை மக்களின் தண்ணீர் பற்றாக்குறை ஓரளவு தீர்ந்துள்ளது.
தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ஜோலார்ப்பேட்டையில் இருந்து இரயில் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட குடிநீர் அக்டோபர் 8ந்தேதியோடு நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 159 முறை இரயில் மூலம் தண்ணீர் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 39.25 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.