தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்து சிதம்பரம் அருகேயுள்ள பெரியாண்டிக்குழியை சேர்ந்த ஜெகன் சிங் என்கின்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி இளைஞர் நேற்று முன்நாள் தீக்குளித்து உயிர் நீத்தார்.
இந்நிலையில் சிதம்பரம் பு.முட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மன்சூர் அலி எனும் இளைஞர் வேல்முருகன் கைதைக் கண்டித்து நேற்று தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தி செய்தி கேள்விப்பட்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ புதுச்சேரி சென்று ஜிப்மர் மருத்துவமனையில் மன்சூர் அலியைப் பார்த்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், “மன்சூர் அலியின் முகம், மார்பு முழுவதும் வெந்து கருகியுள்ளது. சுயநினைவு இல்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஜெகன்சிங் மரணத்திற்கும், மன்சூர் அலி தீக்குளிப்புக்கும் தமிழக அதிமுக அரசும், காவல்துறையும்தான் பொறுப்பு ஆவார்கள். இளைஞர்கள் எதற்காகவும் தாமே உயிரை மாய்த்து கொள்ளக்கூடாது. எதிர்த்து போராட வேண்டும்.
தூத்துக்குடியில் அரசும், காவல் துறையும் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தி, துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை கொன்றது. காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு மிரட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அவருக்கு தைரியமிருந்தால் தூத்துக்குடிக்கு சென்று வரட்டும், பார்க்கலாம்" என்றார்.
மேலும் தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்தனர் என ரஜினி போன்றவர்கள் கூறுவது குறித்து கேட்டதற்கு, "இது போன்ற உளறல்களுக்கு பதிலளிக்க தேவையில்லை. இந்த உளறல்களை தூத்துக்குடிக்கு சென்று கூறட்டுமே... பார்க்கலாம்" என்று கூறினார்.