தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. மேலும், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமிநாசினியைக் கொண்டு கழுவ வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியின் முக்கியத் தலைவர்கள், வேட்பாளர்கள் சிலர் கரோனா நோய்த் தோற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் 'சகாயம் அரசியல் பேரவை' என்ற அமைப்பை தொடங்கி அரசியலில் களமிறங்கினார். இந்த அமைப்பு தமிழக சட்டமன்றத் தேர்தலில் 20 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது. இருப்பினும் சகாயம் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சகாயத்திற்கு செய்யப்பட்ட கரோனா மருத்துவப் பரிசோதனையில் நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து 8- வது நாளாக சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சகாயம் உடல்நிலை குறித்து தெரிவித்துள்ள மருத்துவமனையின் டீன், "கரோனாவால் பாதிக்கப்பட்ட சகாயம் ஐ.ஏ.எஸ். உடல்நிலை நன்றாக உள்ளது. மீண்டும் பரிசோதனை செய்து கரோனா இல்லை எனத் தெரியவந்தால் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" எனத் தெரிவித்துள்ளார்.