இம்சை அரசன் 24-ஆம் புலிகேசியால் தயாரிப்பாளர் ஷங்கரையும் டைரக்டர் சிம்புதேவனையும் கடுமையான இம்சைக்குள்ளாக்கியிருக்கிறார் வைகைப் புயல் வடிவேலு. தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் உள்ள புலிகேசியின் பஞ்சாயத்து இன்னும் முடிந்த பாடில்லை. அதன் பின் வைகைப் புயலுக்கு கைவசம் படங்கள் எதுவுமில்லை. ஹீரோவும் தயாரிப்பாளருமான ஆர்.கே.வுடன் வடிவேலு ஒரு படத்தில் கமிட் ஆகப் போவதாக பேச்சு அடிபட்டாலும் இன்னும் அது கன்ஃபார்ம்
ஆகவில்லை.
என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் ஒரு ’"வின்னர்'’ கைப்புள்ளையவோ, "தலைநகரம்'’ நாய் சேகரையோ, ’"மருதமலை'’ என்கவுண்டர் ஏகாம்பரத்தையோ, "ஃபரண்ட்ஸ்' நேசமணியையோ, ‘கிரி’ வீரபாகுவையோ இனிமேல் வைகைப் புயலே நினைத்தாலும் திரையில் கொண்டு வர முடியாது. ஆறுன கஞ்சி பழங்கஞ்சி ஆகிப் போன கதை தான் காமெடிப் புயலின் சோகக் கதை. அதனால் கொஞ்ச நாட்களாக மதுரையிலிருந்து சென்னைக்கு இரவு மட்டும் வந்து போய்க் கொண்டிருந்தார் வடிவேலு. இப்போது மதுரை புறநகரில் இருக்கும் தனது பண்ணை வீட்டிலேயே பெர்மனெண்டாக தங்கும் முடிவுக்கு வந்துவிட்டாராம் புயல்.
இதனால் சென்னை சாலிகிராமம் ஏரியாவில் இருக்கும் தனது மூன்று வீடுகளையும் வாடகைக்கோ, லீசுக்கோ விட்டுவிட்டு, மலை வாசஸ்தலம் ஒன்றில் சில மாதங்கள் தனிமையில் கழித்துவிட்டு, மதுரைக்குப் போகும் ஐடியாவில் இருக்கிறாராம் வடிவேலு. வைகைப் புயலின் வாழ்க்கையில் கடுமையான சேதாரத்தை ஏற்படுத்திவிட்டது சான்ஸ்லெஸ் புயல்.