குறிப்பிட்ட சில நேரங்களில், பழைய சம்பவங்களும், கசப்பான அனுபவங்களும் மனக்கண் முன் விரியவே செய்யும். அப்படி ஒரு சம்பவம்தான், 2015 டிசம்பர் 1-ஆம் தேதி இரவு, சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியை திடுதிப்பென்று திறந்துவிட்டது. அன்று பெய்த தொடர் மழையும், சென்னை மாநகரத்தை, அப்போது வெள்ளக் காடாக்கி, மக்களின் வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப்போட்டது.
அப்போது, ஏரியில் கட்டிய வீடுகள் வெள்ளத்தில் ‘நீச்சல்’ அடித்தன. வந்தாரை வாழ வைத்த சென்னைக்காரன், அடுத்தவேளை சாப்பாட்டுக்கு யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான். ஆனால், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து, உணவு, உடை, போர்வை, சானிட்டரி நாப்கின், மருந்துப் பொருட்களை வழங்கி திக்குமுக்காட வைத்தனர், தமிழ் மக்கள்.
தற்போதும், செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்கப்போவதாக தகவல் வெளியானதால், மீண்டும் மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. எனினும், இப்போதைக்கு ஏரியைத் திறக்க மாட்டோம் என்று அரசு தெளிவுபடுத்தி இருப்பது, சற்று நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், 21 அடியில் உள்ள நீர்மட்டம், 22 அடியை எட்டினால், உரிய அறிவிப்பு செய்து திறப்போம் என்று சொல்லி வைத்திருக்கிறது பொதுப்பணித்துறை!
எதற்கும் ஒரு தயார் நிலையில் இருப்பதற்காக, 2015 வெள்ளக் காட்சிகள் சிலவற்றை, நினைவலைகளில் பதிந்துள்ள புகைப்படங்களை மீண்டும் பார்த்து வைப்போம்!
அமெரிக்க தூதரகம் முன்பாக அப்போது எப்படி இருந்தது?
ஆலந்தூரில் வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி ஒருவர் எப்படி மீட்கப்பட்டார்?
ஜெமினி பாலத்திற்கு அடியே வெள்ளத்தில் ஆம்புலன்ஸ் மிதந்ததே?
ஆயிரம் விளக்கு உம்மிடி ஜுவல்லரி அருகில் வெள்ளத்தில் வாகனங்கள் தத்தளித்ததே?
தேனாம்பேட்டை திரு.வி.க. குடியிருப்பில் வெள்ளம் புகுந்து, வளர்ப்பு கிளி, ரேசன் அட்டை, சாதிச்சான்று பள்ளிச் சான்றிதழ்களுடன், காமராஜர் அரங்கம் முன்பு, தஞ்சமடைந்தாரே ஒரு பெண்?
ஆழ்வார்ப்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் அன்றைய நிலை என்ன?
வெளியூர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவுப் பொருட்களை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் எப்படி விநியோகித்தனர்?
சைதாப்பேட்டை பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அப்போது ஏர்போர்ட்டுக்கு போவதற்கு எந்த வாகனமும் இயக்கப்படவில்லை. ஹயாத் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டினர், அறைகளைக் காலி செய்துவிட்டு வெளியில் எங்கே செல்வது எனத் தெரியாமல் தவித்தனரே?
எல்லா இடத்திற்கும் விரைவாகச் செல்வதற்கு (fastrack) மக்கள் நடைபயணம்தானே மேற்கொண்டனர்?
மனத்திரையில் வந்து மோதுகின்றனவே அந்த அவலக் காட்சிகள்! மழைக்காலம் அல்லவா? எதற்கும், எப்போதும், சென்னைவாசிகள் நாம் தயாராகவே இருப்போம்!