Skip to main content

" போகிற போக்கில எதையாவது சொல்வார் டிடிவி தினகரன்...! தெறிக்க விட்ட உதயநிதி ஸ்டாலின்..!!

Published on 06/02/2019 | Edited on 06/02/2019

 

u

   

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழிதான் போட்டியிடப் போகிறார் என்பது 100 சதவீதம் உறுதியாகிவிட்டது. இதனால், தொகுதியின் பல்வேறு கிராமங்களுக்கு சென்று கிராமசபை கூட்டம் என்ற பெயரில் மக்களின் குறைகளை கேட்டு வருகிறார் கனிமொழி. நூலகத்திற்கு புத்தகம் வழங்குதல் உள்ளிட்ட சிறு சிறு கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்தும் கொடுக்கிறார்.  குடிநீர் பிரச்சனை, டாஸ்மாக் பிரச்சனை, ரேசன்கடை உள்ளிட்ட பெரும்பாலான கோரிக்கைகளை கண்டிப்பாக திமுக வெற்றி பெற்றதும் நிறைவேற்றப்படும் என உத்திரவாதம் அளித்து செல்கிறார்.


     தூத்துக்குடியை பொறுத்தவரை முன்பு மாவட்ட செயலாளாராக இருந்து மறைந்த பெரியசாமி தான் எல்லாமே. அவரை மிஞ்சி யாரும் கட்சியில் கோலோச்சிவிட முடியாது என்பது கடந்த கால வரலாறு. இந்த முறை மதிமுகவில் இருந்து வந்த ஜோயல், அனிதா ராதாகிருஷ்ணன், பெரியசாமியின் மகன் ஜெகன் உள்ளிட்டோர் தொகுதியை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், ஒருவருக்கு கொடுத்தால், மற்றவர் உள்ளடி வேலை பார்ப்பார். எனவே கனிமொழியை களம் இறக்கிவிட ஸ்டாலின் முடிவு செய்துவிட்டதாக செய்திகள் கசிகின்றன.


     தூத்துக்குடியை பொறுத்தவரை நாடார் சமூகத்து மக்கள் ஓட்டு அதிகம்.  எதிர் தரப்பிலும் இங்கு நாடார் சமூகத்தினரே களம் இறக்கப்படுவார். கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் நாடார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், பிரச்சாரத்தின்போது இதை சொல்லியே அந்த சமூகத்து மக்களின் ஓட்டுக்களை வளைத்துவிடலாம். கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் நாயக்கர், ரெட்டியார் சமூக ஓட்டுக்கள் அதிகம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிகளில் நாடார், கிறிஸ்தவ நாடார், மீனவர்கள் சமூக ஓட்டுக்களும் ஜாஸ்தி.  இந்த ஓட்டுக்கள் திமுக, அதிமுக, மதிமுக என பலவாறு பிரிந்து கிடக்கிறது.


      அதே நேரத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 தொகுதிகளிலும் தேவேந்திர குல சமூக மக்களின் ஓட்டுக்கள் கணிசமாக உள்ளது. இந்த ஓட்டுக்களையும், நாடார் சமூக ஓட்டு, கட்சி பலம் மற்றும் அதிருப்தி வாக்காளர்களை கவர்ந்தாலே "கனி"க்கு வெற்றி கனிந்துவிடும் என கணக்கு போடுகிறது அறிவாலயம்.  இதற்காக கீதாஜீவன் எம்.எல்.ஏவும், அவரது சகோதரரும் களத்தில் இறங்கிவேலை பார்க்கின்றனர். பற்றாக்குறைக்கு உதய நிதி ஸ்டாலினும் அரசியல் அரிதாரம் பூசி தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து மக்களின் குறைகளை கேட்டு வருகிறார். விளாத்திகுளம் தொகுதிக்கு உட்பட்ட நாகலாபுரம் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற அவரிடம், தேவேந்திரகுல சமூக மக்கள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.

 

u


    கூட்டத்தில் பங்கேற்ற மாணவன் பாரத், "பள்ளர், குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திர குலத்தான் ஆகிய 6 சாதிகளை தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் மாற்றம் செய்ய திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? " என்ற கேள்வியை முன்வைத்தார். இதற்கு பதில் அளித்த உதயநிதி, "இந்த கோரிக்கை தொடர்பாக 2011-ஆம் ஆண்டிலேயே முதல்வராக இருந்த கருணாநிதி, நீதியரசர் ஜனார்த்தனம் தலைமையில் குழு அமைத்தார். ஆனால் அதற்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் கோரிக்கை நிறைவேறவில்லை. நிச்சயம் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்" என்றார்.


    "இம்மானுவேல் சேகரன்  நினைவிடத்திற்கு அஞ்சலி நிகழ்ச்சிக்கு திமுக மேல்மட்ட தலைவர்கள் யாரும் செல்வதில்லை. சம்பிராயத்திற்கு கீழ்மட்ட நிர்வாகி மட்டும் சென்று அஞ்சலி செலுத்துவார். நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு இம்மானுவேல் சேகரனுக்கு அரசு விழா எடுப்போம் என டிடிவி தினகரன் சொல்கிறார். இதை சொல்ல திமுக ஏன் தயங்குகிறது என்ற கேள்வியை முன்வைத்தார்"மற்றொரு மாணவர் விக்னேஷ்.


   "ரோட்ல போற போக்குல யார் வேண்டுமானும் சொல்லிட்டு போகலாம். அதே மாதிரி டிடிவி தினகரன் சொல்லிட்டு போயிருக்கார். ஆனால் அவரால் செயல்படுத்த முடியாது என்ற டாப் கியரில் எகிறினார் உதயநிதி. அப்போது குறுக்கிட்ட எம்.எல்.ஏ கீதாஜீவன், உங்கள் கோரிக்கையை கண்டிப்பாக தம்பி(உதயநிதி) கட்சித் தலைமையிடம் கொண்டு செல்வார்" என்றார்.


       முன்னதாக ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட முடிவைத்தானேந்தல் கிராமத்திலும், தேவேந்திர குல மக்கள் இதே கோரிக்கையை முன்வைத்தனர். கண்டிப்பாக செய்வோம் என்றார் உதயநிதி. மொத்தத்தில் எந்தெந்த கிராமங்களில் தேவேந்திரகுல சமூக ஓட்டுக்கள் நிறைய இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்று பூத் கமிட்டியை கச்சிதமாக அமைப்பதிலும் திமுக கன கச்சிதமாக இறங்கி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்