தொண்டர்களை சேர்ப்பதற்காக செயலி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், முதல்கட்டமாக 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப் போகிறோம். அதற்காக டைம் லிமிட் ஒன்றை கொடுத்து இருக்கிறேன். செப்டம்பர் 14 இல் இருந்து நவம்பர் 14 அவகாசம் கொடுத்திருக்கிறேன். ஒரு தொகுதிக்கு பத்தாயிரம் இளைஞரணி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இதுதான் முதல் இலக்கு. கண்டிப்பாக செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள்.
இளைஞரணி சார்பில் நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கிறோம். அதேபோல் என்னிடமிருந்து என்னென்ன விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். என்ன தடைகள் இருக்கிறது, எதனால் உறுப்பினர்கள் சேர்க்கை கம்மியா இருக்கு அதை எப்படியெல்லாம் அதிகப்படுத்தலாம் என்பது பற்றி யோசித்து வருகிறோம்.
இதற்காக ஒரு செயலியை வெளியிடப் போகிறோம். தூர்வாரப்படாத குளங்கள், ஏரிகளை தூர்வார வேண்டும். அதை முதலில் திருக்குவளையில் இருந்து ஆரம்பிக்க போகிறோம். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதற்காக ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.