திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேரூராட்சிக்கு ஜீலை 2ந்தேதி ஆய்வுக்கு வந்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே, விளம்பர பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளது. இதுப்பற்றி அப்பகுதியில் கடை வைத்துள்ளவர்கள் முறையிட்டனர். இதில் அனுமதி பெறாத பேனர்களை உடனே அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டது. தனியார் நிறுவன ஜூவல்லரி ஒன்றின் பேனரும் அகற்றப்பட்டுள்ளது.

அந்த பேனர் ஜீலை 3ந்தேதியான இன்று மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்த்து செங்கம் நகர கடைக்காரர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். இது தொடர்பாக விசாரித்தவர்களிடம், அவர்கள் பேனர் வைக்க அனுமதி பெற்றுள்ளார்கள். அதனால் மீண்டும் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றுள்ளார்கள்.
பேனர் வைக்க அனுமதி பெற்றுள்ளார்கள் என்றால், அது எத்தனை நாளைக்கு, நீதிமன்ற உத்தரவு எத்தனை நாள் வரை வைக்கலாம் என்கிற வழிக்காட்டல் உள்ள நிலையில் அதனை கடைப்பிடித்து தான் இந்த பேனர் வைக்க அனுமதி தந்துள்ளார்களா ?, அனுமதியோடு தான் பேனர் வைத்துள்ளார்கள் என்றால் பின்னர் ஏன் அதனை நேற்று கழட்ட வேண்டும் என கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள். அவர்களோ, பணம் வாங்கிக்கொண்டு அதிகாரிகள், பேனர் வைப்பதை கண்டுக்கொள்ளாமல் விடுவதால் தான் இந்த சிக்கல். இந்த பேனர் அனுமதி பெற்று தான் வைக்கப்பட்டுள்ளது என்றால், நீதிமன்றம் மற்றும் அரசின் உத்தரவுப்படி எத்தனை நாள் வைக்க அனுமதிக்கப்படுகிறது, அதற்கான அனுமதி தேதி, எண் போன்றவை விளம்பர பேனரில் குறிப்பிட வேண்டும் என்கிற உத்தரவு உள்ளது அது ஏன் இந்த பேனரில் இல்லையே என கேள்வி எழுப்புகின்றனர்.
இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள் அதிகாரிகள்?