கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக சட்டமன்றத்தை பெருக்கி சுத்தம் செய்கின்ற பணிக்கு 14 பேர் தேவை என்றும், இப்பணிக்கு 8-ஆம் வகுப்புக்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும் அரசு விளம்பரம் செய்திருந்தது. 14 காலியிடங்களுக்கு 15000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருப்பதாக தெரிகிறது.
விண்ணப்பங்களை பிரித்து சரிபார்த்த போதுதான் அதிர்ச்சி காத்திருந்தது. விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் கல்வித்தகுதி பகுதியில் B.E, MBA, M.Com, M.Sc என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பொறியியல் படித்தவர்கள் பல வர்த்தக கட்டிடங்களில் லிப்ட் இயக்குபவர்களாக வேலை பார்த்து வருவது முன்பே தெரிந்ததுதான். ஆனால் துப்புரவு பணிக்கு இவ்வளவு கல்வி தகுதியுடன் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்றால் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகிறது.
சட்டமன்றத்திற்கு உள்ளே அமர்ந்து சட்டம் இயற்றுகிறோம் என்று மேஜை தட்டுகின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பல பேருடைய கல்வித்தகுதி என்னவென்று தமிழகம் அறிந்தது. மெத்த படித்தவர்கள் துப்புரவு பணிக்கு விண்ணப்பித்திருப்பதை வேதனையோடு மட்டும் பார்க்க கூடாது. அரசுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற செயல்.
தமிழகத்தில் பள்ளிகளும், கல்லூரிகளும் பெருகுவது போல தொழிற்சாலைகள் பெருகவில்லை. படிக்க வேண்டும், படிக்க வேண்டும் என்று கல்வியை பற்றி மட்டுமே கவலைப்பட்டு வந்த தமிழகத்திற்கு படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்க வேண்டுமென்ற எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டிருக்கிறது. இதைதான் கடந்த பல வருடங்களாக வலியுறுத்தி வருகின்றோம்.
லட்சக்கணக்கான கோடிகள் முதலீடு வந்திருக்கிறது என்று திரும்பத்திரும்ப சொன்னாலும் படித்தவர்களுக்கு வேலை கொடுக்கின்ற வகையில் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படவில்லை, இயங்கி கொண்டிருக்கின்ற தொழிற்சாலைகளும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான ஒரு அமைச்சர் உயர் அதிகாரிகள் கீழ் ஒரு துறையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த கருத்துகளை யாரையோ குறை சொல்லவோ, சுட்டிக்காட்டவோ நான் சொல்லவில்லை. எதார்த்தமான ஒரு சூழ்நிலையை இந்த நிகழ்வை விட வேறொன்றின் மூலம் உதாரணமாய் காட்ட முடியாது. மத்திய, மாநில அரசுகள் இப்போதாவது விழித்துக்கொள்ளுங்கள் என்று வேலையில்லா பட்டதாரிகளின் சார்பாக கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.