திமுகவின் முன்னாள் அமைச்சர் மறைந்த தங்கபாண்டியனின் பேத்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் மகளுமான நித்திலா சந்திரசேகர் திருமணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமணத்தில் மணமக்களை வாழ்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, தமிழச்சி பெயர் மாற்றம் குறித்து பேசினார்.
அவர் பேசியதாவது; “இங்கு நம்முடைய பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னார்; நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன் இயற்பெயர் சுமதி. அவர் சுமதியாக இருந்தபோது, கல்லூரியில் ஒரு பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தவர்.
நம்முடைய மா.சுப்ரமணியன் சுட்டிக்காட்டியது போல, இளைஞர் அணியின் முதல் மாநில மாநாடு நெல்லையில் நடத்திய நேரத்தில், அந்த மாநாட்டிற்கு யார் தலைமை வகிப்பது? அந்த மாநாட்டை திறந்து வைப்பது? அதில் யார் யார் பங்கேற்பது? என்பதையெல்லாம் நம்முடைய தலைவர் கலைஞர் அடையாளம் காட்டி எங்களுக்கு குறித்து கொடுத்தார். அப்போது அந்த மாநாட்டின் கொடியேற்று விழா நிகழ்ச்சியை தங்கபாண்டியனின் மகள் சுமதியை அழைத்து நடத்துங்கள் என்று எங்களுக்கு உத்தரவிட்டார்.
அதற்கு அடுத்த நாள் எங்களை அழைத்து, “சுமதி என்று பெயர் போட வேண்டாம். நான் பெயர் சொல்கிறேன், அந்தப் பெயரைப் போட்டு விளம்பரப்படுத்துங்கள்” என்று சொன்னார். அதற்குப் பிறகு அவரை அழைத்து அனுமதி கேட்கச் சொன்னார்; தகவலை தெரிவிக்கச் சொன்னார்.
அப்போது அவரை அழைத்து, “தலைவர் இவ்வாறு விரும்புகிறார். நீங்கள் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அந்தப் பணிக்கு ஏதேனும் இடையூறு வந்து விடுமா?” என்ற கேள்வியை கேட்டபோது, “நான் எந்த இடையூறைப் பற்றியும் கவலைப்படவில்லை. தலைவர் சொன்னதை அவ்வாறே நான் ஏற்றுக்கொள்கிறேன். உடனடியாக என்னுடைய பெயரைப் போடுங்கள். நான் மகிழ்ச்சியுடன் வந்து கலந்து கொள்கிறேன்” என்று சொன்னார்.
அதற்குப் பிறகு அவர் ஒப்புக்கொண்டார் என்று தலைவரிடத்தில் சொன்னபோது, “நான் மகிழ்ச்சி அடைகிறேன். மிக மிக சந்தோஷப்படுகிறேன். அதே நேரத்தில் அவருடைய பெயரை மாற்றி ‘தமிழச்சி தங்கபாண்டியன்’ என்று வெளியிடுங்கள்” என்று விளம்பரப்படுத்தச் சொன்னார். அதற்குப் பிறகுதான் அவர் தமிழச்சி தங்கபாண்டியனாக மாறினார்.” இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.