திரைப்படங்களில் நடித்துக் கொண்டே தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வருகிறார் விஜய். மேலும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் தனது இலக்கு எனக் குறிவைத்துச் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் அவ்வப்போது நடைபெற்று வந்தது.
அடுத்தகட்டமாக கட்சிக்கான கொடி இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதற்கான விழா இன்று காலை தொடங்கியது. இதில் கட்சியின் தலைவர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தவெகவின் பொதுச்செயலாளர் ஆனந்த் வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் இரண்டு போர் யானைகளுக்கு நடுவில் வாகை மலர் இடம் பெற்றிருக்கும் வகையிலான கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து கொடி கம்பத்தில் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து .'தமிழன் கொடி பறக்குது' எனத் தொடங்கும் கட்சி பாடலும் வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் விஜய் சிறப்புரைற்றினார், அவர் பேசுகையில், ''அனைவருக்கும் வணக்கம். போன பிப்ரவரி மாதம் கட்சியின் பெயரை அறிவித்தேன். அன்னையிலிருந்து ஒரு குறிப்பிட்ட நாளுக்காக நீங்கள் எல்லாம் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. எனக்கு தெரியும். ஆனால் அதற்கு முன்னதாகவே நீங்கள் கொண்டாடி மகிழ்வதற்காக நம்ம தமிழக வெற்றிக் கழகத்தினுடைய கொடியை இன்று நான் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். இது என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களாகிய உங்கள் முன்னாடியும், சரி தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் முன்னாடியும் சரி இன்று அந்த கொடியை அறிமுகப்படுத்துவதில் எனக்கு ரொம்ப ரொம்ப பெருமையாக நினைக்கிறேன்.
இதுவரைக்கும் நாம் நமக்காக உழைத்தோம். இனி வரும் வருடங்களில் கட்சி ரீதியாக நம்மை தயார்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டிற்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காகவும் நாமெல்லாம் உழைப்போம். இந்த புயலுக்கு பின் அமைதி, ஆர்ப்பரிப்பு என்று சொல்வார்கள். அதேபோல் நமது கொடிக்கு பின்னாடி ஒரு இன்ட்ரஸ்டிங்கான வரலாற்று குறிப்பு இருக்கிறது. அது என்னவென்று நீங்கள் ஒரு நாளுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்கன்னு சொன்னேன் அல்லவா, அந்த நாளில் நம் கட்சியின் கொள்கை, செயல்திட்டங்கள் என்ன என சொல்லும் பொழுது இந்த கொடிக்கான விளக்கத்தை நான் சொல்கிறேன். அதுவரைக்கும் சந்தோஷமாக... கெத்தா நம்ம கொடியை ஏற்றி கொண்டாடுவோம். இது வெறும் நம்முடைய ஒரு கட்சிக்கான கொடியாக மட்டும் இதை நான் பார்க்கவில்லை. தமிழ்நாட்டினுடைய வருங்கால தலைமுறைக்கான வெற்றிக்கான கொடியாகத்தான் பார்க்கிறேன். இந்த கொடியை உங்கள் இல்லத்தில் உங்கள் உள்ளத்தில் சொல்லாமலே ஏற்றுவீங்கனு என நன்றாக தெரியும். இருந்தாலும் அதற்கான முறையான அனுமதிகளை வாங்கிக் கொண்டு அனைவரிடமும் தோழமை பாராட்டி நாம் இதை ஏற்றி கொண்டாடுவோம். அதுவரைக்கும் உறுதியாக இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி'' என்றார்.