கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவருக்கு முன்பே கிராமங்கள் தோறும் சோதனைச்சாவடிகள் அமைத்து கிருமி நாசினி தெளித்த பிறகே ஊருக்குள் அனுமதித்தனர் இளைஞர்கள். ஊராட்சிகள் தோறும் கிருமி நாசினி, பிளிச்சிங்பவுடர் அடிக்கடி தௌக்கப்பட்டு பொது இடங்களில் கை கழுவ சோப்பு, தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. சாதாரணமாக ஒவ்வொரு கிராமத்து கடைகள் தொடங்கி நகரங்களில் உள்ள கடைகள், வீடுகள் வரை மஞ்சள் கரைசல் வைத்து கை கழுவச் செய்தனர். இத்தனை முன்னெச்சரிக்கைகளையும் தாண்டி பல தெருக்கள், வீடுகளுக்கு யாரும் வரமுடியாமல் தடுப்புகளை ஏற்படுத்தினார்கள். குறைந்தது 10 அடி தூரத்தில் நின்றே பேசினார்கள். ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டால் அந்த தெரு முடக்கப்படுவதுடன் அந்த ஊருக்கே வெளியாட்கள் செல்ல பயந்தனர். தொற்று உறுதி செய்யப்பட்டவரை கவச உடை அணிந்து வரும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரும், செவிலியரும் தூரமாக நின்று ஏறச் சொல்லி ஏற்றிச் சென்று கரோனா சிகிச்சை மையத்தில் சேர்த்தனர்.
அங்கு கரோனா நோயாளிகளுக்கு சிறப்பு கவனிப்புகளுடன் சத்தான உணவு, பிரியாணி, சூப், பு ரோட்டின் நிறைந்த பயறு வகைகள் வழங்கப்பட்டு சிகிச்சையும் அளித்து திடமாக அனுப்பி வைத்தனர். ஆனால் இப்போது இது அத்தனையும் கரோனா பரவல் வேகமாக இருந்தாலும் எதுவும் நடக்கவில்லை என்பதே வேதனையாக உள்ளது.
புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்தில் நாம் நேரில் கண்டதும், சிகிச்சை பெற்றுவருபவர்கள் கூறியதும், கடந்த ஒரு மாதமாக வேகமாக தொற்று பரவி வரும் நிலையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல பதினோரு 108 ஆம்புலன்ஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 8 ஆம்புலன்ஸ்களில் தற்போது கரோனா நோயாளிகளை அழைத்துச் செல்கிறார்கள். கரோனா தொற்றாளர்களை அழைத்துச் செல்லும் எந்த ஒரு 108 ஊழியரும் மாஸ்க் தவிர வேறு எந்த பாதுகாப்பு உபகரணங்களும் அணியவில்லை. கவச உடை இல்லை. இதுபற்றி 108 ஊழியர்களிடம் கேட்டபோது, ''போன வருசம் ரொம்ப எளிமையான பிபி கிட் கொடுத்தாங்க ஆனால் இப்ப சாக்குக்கு நிகரான பிபி கிட் கொடுத்திருக்காங்க. 10 நிமிடம் கூட போட்டுக் கொண்டு வாகனம் ஓட்ட முடியாது. உடலில் உள்ள நீர் லிட்டர் கணக்கில் வியர்வையாக வெளியேறுகிறது. பிபி கிட் போட்டுக் கொண்டு சிலரை அழைத்து வந்தாலே எங்கள் உடலில் உள்ள நீர் சத்து முற்றிலும் காணாமல் போய் நாங்களும் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர வேண்டி வரும். அதனால் பிபி கிட் போடாமல் உயிரை பணயமாக வைத்து மற்றவர்கள் உயிரைக் காக்க ஓட்டுகிறோம். இப்படி ஓட்டியதில் தேனி மாவட்டத்தில் ஒரு ஆம்புலன்ஸ் பைலட் இப்ப கரோனா சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் எளிமையான பிபி கிட் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றவர்கள். மேலும், ''மாவட்டத்தில் 34 ஆம்புலன்ஸ்களில் 10 ஆம்புலன்ஸ்களுக்கு முககவசம், கையுறை கூட வழங்கவில்லை. அதனை உடனே வழங்க வேண்டும்'' என்றனர்.
அதேபோல கரோனா சிகிச்சை மையத்தின் முன்னால் உணவு பைகளுடன் வரிசையாக பலர் காத்திருக்க அவர்களிடம் கேட்ட போது, ''எங்கள் உறவினர்கள் கரோனா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு காலை, மதியம், இரவு உணவுகளை நாங்கள் தான் கொண்டுவந்து கொடுக்கிறோம். இதுபோல உறவினர்கள் இல்லை என்றால் பலர் பட்டினி தான் கிடக்கிறார்கள். போன வருசம் போல உணவு கொடுக்கவில்லை. சராசரியான உணவு கொடுக்கிறார்களாம். அதை சாப்பிட முடியவில்லை. அதனால் நல்லா இருக்கிற நாங்களும் ஒரு நாளைக்கு 3 வேலையும் முககவசம் அணிந்து உணவு கொண்டு வருகிறோம். இப்படி உணவு கொடுக்க வரும் பலருக்கும் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதனை தடுக்க கடந்த ஆண்டு போல உணவு வழங்க வேண்டும்'' என்றனர்.
சிகிச்சையில் உள்ள சிலர், ''மற்ற நோயாளிகளைப் போல தான் நடத்தப்படுகிறோம். சிடி ஸ்கேன் எடுத்தால் அதன் ரிப்போர்ட் கொடுக்கமாட்டார்கள். நாங்களும் வெளியே போய் வாங்க முடியாது. கூட யாராவது உறவினர்கள் இருந்தால் தான் போய் வாங்கிவர முடியும். அதிலும் காலை 8 முதல் 9 மணிக்குள் ரிப்போர்ட் வாங்க போய் பதிவு செய்யனும். உறவினர்கள் இல்லாதவர்கள் சிடி ஸ்கேன் எடுத்தும் வாங்க ஆள் இல்லாமல் வாரக்கணக்கில் காத்துக் கிடக்கிறோம். அந்த ரிப்போர்ட் பார்க்காமலேயே சிகிச்சை நடக்கிறது. அதனால சிடி ஸ்கேன் எடுத்தால் உடனே கரோனா வார்டுக்கு அதன் ரிப்போர்ட் அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
இப்படி பல புகார்களை அடுக்கிக் கொண்டே போகிறார்கள். இவ்வளவு அசாக்கிரதையாக இருந்தால் கரோனாவை கட்டுப்படுத்த முடியாது. மேலும் பரவத்தான் செய்யலாம். மாவட்ட நிர்வாகமும் மருத்துவமனை நிர்வாகமும் துரிதமாக செயல்பட்டால் மட்டுமே பரவலை தடுக்கலாம். ஆனால் மருத்துவமனை சார்பில் ''அரசு வழிகாட்டுதல்படி எல்லாம் சரியாக நடக்கிறது'' என மருத்துவமனை வட்டாரத்தில் கூறுகின்றனர்.