நாமக்கல் அருகே உள்ள கிரீன் பார்க் நீட் பயிற்சி மையத்திற்குச் சொந்தமான 17 இடங்களில் மூன்று நாள்களாக நடந்து வரும் வருமான வரித்துறை சோதனையில், அப்பயிற்சி மைய இயக்குநர்கள் 150 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும், கணக்கில் வராத 30 கோடி ரூபாய் ரொக்கமும் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டி போஸ்டல் நகரில் கிரீன் பார்க் என்ற பெயரில் சுயநிதி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் கிரீன்பார்க் நீட் பயிற்சி மையமும் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் பிளஸ்2 பொதுத்தேர்வில் கடந்த காலங்களில் மாநில, மாவட்ட அளவில் தொடர்ந்து தகுதி பெற்று வருவதோடு, கணிசமானோர் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளிலும் இடம் பிடித்து வருகின்றனர்.
இதனால், தமிழகம் முழுவதும் உள்ள பல விஐபிகள், அரசு உயர் அதிகாரிகளின் பிள்ளைகள் இப்பள்ளியில் சேர்ந்து படித்து வருகின்றனர். இந்நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து, கிரீன் பார்க் பள்ளி நிர்வாகமே நீட் பயிற்சி மையத்தையும் தொடங்கியது. கடந்த 2016-2017ம் ஆண்டில் இந்த மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் 405 பேரும், 2017-2018ம் கல்வி ஆண்டில் 533 பேரும் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்ததால் இப்பயிற்சி மையத்திற்கு மாநில அளவில் மவுசு கூடியது.
இதனால் கிரீன் பார்க் பள்ளியில் பிளஸ்1, பிளஸ்2 படிக்காத மாணவர்கள்கூட நீட் பயிற்சிக்காக இம்மையத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர். மாணவர்கள், பெற்றோர்களிடையே கிடைத்த வரவேற்பை அடுத்து பெருந்துறை, கரூர், சென்னை ஆகிய இடங்களிலும் கிரீன்பார்க் நீட் பயிற்சி மையங்களின் கிளைகள் தொடங்கப்பட்டன.
இம்மையத்தில் நீட் பயிற்சிக்கு சேரும் மாணவர்களிடம் 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாமக்கல் மையத்தில் மட்டுமே 2000 பேர் படித்து வருகின்றனர். பெருந்துறை, கரூர், சென்னை கிளைகள் என மொத்தமாக இக்குழுமத்தில் 5000 மாணவர்கள் படித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு முறையான ரசீதுகள் தருவதில்லை என்றும், பெறப்படும் தொகை ஒன்றாகவும், அதற்கு வழங்கப்படும் ரசீதில் மிகச்சொற்பமான தொகையைக் குறிப்பிட்டு பெயரளவுக்கு ரசீது வழங்கப்படுவதாகவும் வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து சென்னை மற்றும் திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அக். 11ம் தேதி காலை, ஐந்து குழுக்களாக பிரிந்து சென்று நாமக்கல் உள்ளிட்ட நான்கு இடங்களில் உள்ள கிரீன்பார்க் நீட் பயிற்சி மையங்கள், அலுவலகங்கள், இயக்குநர்களின் வீடுகள் என மொத்தம் 17 இடங்களில் ஒரே நேரத்தில் திடீர் சோதனையில் இறங்கினர். முதல் நாள் சோதனை, நள்ளிரவைக் கடந்தும் நடந்தன.
தலைமை அலுவலகமான நாமக்கல் கிரீன்பார்க் பயிற்சி மையத்தில் உள்ள கலையரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த சில பெட்டிகளில் இருந்து கணக்கில் வராத 30 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கணினி மென்பொருள்களை ஆய்வு செய்தபோது, மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டு இருந்தது. மேலும், ரசீதுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கும், கணினியில் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களும் முன்னுக்குப் பின் முரணாக இருந்தது தெரிய வந்தது.
கிரீன்பார்க் பள்ளி இயக்குநர்களான சரவணன், அவருடைய மாமனார் கிருஷ்ணசாமி, சகோதரர் பாலு, குருவாயூரப்பன், குணசேகரன், மோகன் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில் முரணான தகவல்களைக் கூறியுள்ளனர். இப்பயிற்சி நிறுவனம் மொத்தமாக 150 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என்கிறார்கள்.
இந்த சோதனை சனிக்கிழமை அன்றும் தொடர்ந்த நிலையில் மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் (அக். 13) தொடர்ந்து நடந்தது. இரவு 10 மணிக்கு மேல் ஆகியும் சோதனை முடியவில்லை.
இதையொட்டி, பள்ளிக்குள் செல்ல வெளி நபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி விடுதிகள், அலுவலகத்தில் இருந்தும் யாரும் வெளியேறக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பயிற்சி மையத்திற்கு சிட்டி யூனியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கார்ப்பரேஷன் வங்கிகளில் கணக்கு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த மூன்று வங்கிக் கணக்குகளையும் வருமான வரித்துறை முடக்கி வைத்துள்ளது. வரித்துறை சோதனையையொட்டி, பள்ளியில் பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் இயங்கி வரும் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
கிரீன்பார்க் நீட் பயிற்சி மைய குழுமங்களில் வரி ஏய்ப்பு நடப்பதாக வந்த தகவல்களின்பேரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில், நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி கலையரங்கத்தில் இருந்து கணக்கில் வராத 30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில், 150 கோடி ரூபாய்க்கும் மேல் கணக்கில் காட்டாத வருமானம் இருப்பதாக தெரிகிறது. பினாமிகள் பெயர்களில் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு கணக்கில் வராத தொகை வரவு வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.