சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் இன்று தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் சுபாஷ் சந்திரன் தலைமையில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். காவல்துறையினரும் இந்த ஆய்விற்கு உதவி புரிந்தனர்.
சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் பயன்படுத்தக்கூடிய எடை இயந்திரங்கள் மறுமுத்திரை இடாமல் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த ஆய்வு மேற்கொண்டதாகத் தெரிகிறது. சட்டமுறை எடையளவுச் சட்டம் என்ற சட்டத்தின்படி நுகர்வோர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு வணிக நிறுவனங்களில் எடை மற்றும் அளவுகளை உறுதிப்படுத்த இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் எடை இயந்திரத்தைச் சரி பார்த்து தொழிலாளர் நலத்துறை மூலமாகச் சான்றிதழைப் பெற வேண்டும். அதற்கான முத்திரை இடுவார்கள். அப்படி மறு முத்திரை இல்லாமல் வைத்திருக்கக்கூடிய எடை இயந்திரங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அதன் அடிப்படையில், மீன் மார்க்கெட்டில் பயன்படுத்திய சுமார் 60க்கும் மேற்பட்ட மறு முத்திரையிடப்படாத எடை இயந்திரங்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் மறு முத்திரையிடாத கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.