தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கிய கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இன்னும் பல கிராமங்கள் மீளமுடியாத நிலையில் பெரும் துயரை சந்தித்து வருகிறது.
அந்தவகையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள கிராமங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்புகளால் மக்கள் அன்றாட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இன்றளவும் தவித்துவருகின்றனர். அரிசி, பால், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, நாப்கின் உள்ளிட்ட அடிப்படை பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
சில கடைகளில் ஒரு லிட்டர் பால் 80 ரூபாய்க்கு விற்கப்படுத்தாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தில்லைவிளாகம், ஜம்புவானோடை பகுதிகளில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து உள்ளதால் அங்குள்ள விவசாயிகள் கண்ணீர் மல்க தங்களது நிலைமையை அதிகாரிகளிடம் எடுத்து வைத்து வருகின்றனர்.
தென்னையை மட்டுமே நம்பி உள்ள விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களை தொலைத்து நிர்கதியாகி உள்ளனர். அதேபோல் முத்துப்பேட்டையில் மீன்பிடி தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட துப்புரவுதொழிலாளர்கள் உதவியுடன் முத்துப்பேட்டையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் அதிகப்படியான மின் பணியாளர்களும் முத்துப்பேட்டை மீள பணியாற்றி வருகின்றனர்.