கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வயலூர் கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்த பின்பு சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து விவசாயிகள் தங்களின் விளை பொருளான நெல் மூட்டைகளைக் கொண்டு வந்து குவியல் குவியலாக குவிக்கத் தொடங்கினர்.
சுமார் 50 ஆயிரம் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குவிந்துள்ள நிலையிலும், அதிகாரிகளின் அலட்சியத்தால் சுமார் பத்து நாட்களுக்கு மேல் நெல் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (27.08.2020) பெய்த திடீர் கனமழையால் குவியல் குவியலாக வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் நனைந்து, அதிக ஈரப்பதம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
சரியான நேரத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால், தங்களின் விளைபொருட்கள் நல்ல விலைக்கு விற்றிருக்க முடியும் என்றும், தற்போது மழையில் நனைந்ததால் விலை வீழ்ச்சி அடைவதோடு மட்டுமில்லாமல், தங்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறி ஆகிவிடும் என்று வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் மழையில் நனைந்த நெல்மணிகளை வெயிலில் உலர்த்தும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு காலம் தாழ்த்தாமல், விவசாயிகளின் விளை பொருட்களை விரைவாகக் கொள்முதல் செய்ய ஆணையிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.