வருகிற புகார்களை பெற்று உரிய தீர்வை கொடுக்க வேண்டிய அந்த பெண் காவலர்கள் 'ஐயா முதலில் எங்கள் புகாரை கவனியுங்கள்' என மாவட்ட எஸ்.பி.யிடம் கண்ணீர் விட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்ட காவல் துறையில் தொழில்நுட்ப பிரிவு தனியாக இயங்கி வருகிறது. இந்த தொழில்நுட்ப பிரிவில் பனியாற்றுபவர்களின் முக்கிய பணியே வயர்லெஸ் வாக்கி டாக்கியை பராமரிப்பதும், ஆன்லைன் எப்.ஐ.ஆர். போன்ற பணிகளை மேற்கொள்வதே ஆகும். ஈரோடு மாவட்டத்தின் தலைமை தொழில்நுட்ப பிரிவு அலுவலகம் ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் கீழ் தளத்தில் தான் இயங்கி வருகிறது. இதை கடந்து தான் மாவட்ட எஸ்.பி. தனது அலுவலகத்திற்கு செல்ல முடியும். இந்த தொழில்நுட்ப பிரிவில் பத்துக்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் இதே தொழில்நுட்ப பிரிவை கவனித்துக் கொள்ளும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் சென்ற சில மாதங்களாக இந்த பிரிவில் பணியாற்றி வரும் பெண் எஸ்.ஐ.க்கள் சிலரிடம் பாலியல் ரீதியாக ஆபாசமாக பேசியும், சிலரிடம் தொடுதல் போன்ற சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
பாதிக்கப்பட்ட பெண் எஸ்.ஐ.க்கள் தங்களை தைரியப்படுத்திக்கொண்டு வாய்மொழியாக ஈரோடு எஸ்.பி. தங்கதுரையிடம் நடந்ததை கூறி அழுது புகார் செய்துள்ளனர். அதிர்ச்சியடைந்த எஸ்.பி. தங்கதுரை இது தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் வன்கொடுமை பாதுகாப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி தலைமையில் தனி கமிட்டி அமைத்து புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுக்கிறார். இந்த தனி கமிட்டியில் பெண் இன்ஸ்பெக்டர், தன்னார்வலர் மற்றும் இரண்டு பேர் என நான்கு பேர் உள்ளளார்கள். இந்த தனி கமிட்டியினர் புகார் கூறிய பெண் எஸ்.ஐ.களிடம் ரகசியமாக விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.
மேலும் முழு விசாரணை செய்து கமிட்டியினர் எஸ்.பி.யிடம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என தெரிகிறது. அந்த தொழிழ்நுட்ப பிரிவு போலீஸ் அதிகாரி மூன்று பெண் காவலர்களை தனது அதிகாரத்தை பயன்படுத்தி இரையாக்கியுள்ளார் என அதிர்ச்சி தகவல்களும் எஸ்.பி. அலுவலகத்தில் பேசப்படுகிறது. பெண் போலீசிடம் நடந்துள்ள பாலியல் அத்துமீறல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.