கோவை மாவட்டம் கோவை புதூர் அருகே உள்ள தில்லை நகரைச் சேர்ந்தவர் மோதிலால். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென் பொறியாளராக வேலை செய்து வருகிறார். மோதிலாலின் மனைவி சங்கீதா. இவர் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சங்கீதாவிற்கு கொரியர் வந்திருப்பதாக செல்போன் மூலம் அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதனை உண்மை என நம்பிய சங்கீதா தனது வீட்டை விட்டு வெளியேறி சிறிது தூரம் நடந்து சென்று அந்த கொரியரை வாங்கியுள்ளார்.
அப்போது திடீரென்று கொரியரை கொடுத்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சங்கீதாவை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கீதா கத்தி கூச்சலிடவே, அந்த மர்ம நபர் தனது டூவீலரை எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டார். இதனிடையே, தோள்பட்டையில் காயம் அடைந்த சங்கீதா ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சிலம்பரசன் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதலில், நகை பறிப்பில் ஈடுபட்டு கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதாகத் தகவல் பரவிய நிலையில், பின் சங்கீதாவை தாக்கவே திட்டமிட்டு இந்த சம்பவத்தை நடத்தியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அந்த பகுதியில் உள்ள வாட்ச்மேன் ஒருவரிடம் போன் வாங்கி, சங்கீதாவை அழைத்துள்ளார். அதுமட்டுமின்றி உங்கள் வீடு இருக்கும் தெருவில் நாய்கள் அதிகம் இருப்பதாக கூறிய மர்ம நபர் திட்டமிட்டு சங்கீதாவை வெளியே வரவழைத்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே, எதற்காக சங்கீதா தாக்கப்பட்டார்? அவருக்கு யாரேனும் எதிரிகள் இருக்கிறார்களா? என பல்வேறு கோணத்தில் குனியமுத்தூர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் கோவை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.