தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் அவரது உருவம் பொறித்த நூறு ரூபாய் நினைவு நாணயத்தை மத்திய அரசு வெளியிட இருக்கிறது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அளித்திருந்தது. இத்தகைய சூழலில் சென்னையில் இன்று (18.08.2024) கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிடுகிறார்.
கலைவானர் அரங்கில் நடக்கவிருக்கும் இதற்கான விழா ஏற்பாடுகளைத் தமிழக அரசு கவனித்து வருகிறது. அரசியல் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமும் இணைந்து விழாவை நடத்துவது போல இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து அரசியல்கட்சிகளின் தலைவர்களும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த விழாவை பிரமாண்டப்படுத்தவும், விமர்சையாக நடத்தவும் அரசு அதிகாரிகளுக்குத் தேவையான உத்தரவுகளைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறப்பித்துள்ளார். அதே சமயம் கலைஞர் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுவதற்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடச் சென்னை வருகை தந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, சேகர்பாபு, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, கலாநிதி விராசாமி, தயாநிதி மாறன், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.