தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் போலீசார் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்தப் போது கடந்த 14 ஆம் தேதி (14.07.2024) அதிகாலையில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். அதே சமயம் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். அதோடு தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளையும் எதிர்க்கட்சியினர் எழுப்பினர்.
இதற்கிடையே கடந்த 9 ஆம் தேதி (09.07.2024) பெரம்பூர் அயனாவரம் பகுதியில் அமைந்துள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்குச் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிஆகியோர் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில் மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர் மற்றும் அவரது மனைவி பொற்கொடியை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இன்று (17.04.2024) சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த சந்திப்பின் போது ம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரிடம் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, ‘கொலை சம்பவம் குறித்த விசாரணைக்கு மத்திய அரசு உதவியாக இருக்கும்.’ எனத் தெரிவித்தார்.