![Union leader shocked by ADMK councilors' silence!](http://image.nakkheeran.in/cdn/farfuture/7RKqCh3F6GVmMFH1-_rN0KUmYf96xeKPgO8UyVr6aS4/1639390439/sites/default/files/inline-images/th-1_2405.jpg)
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை ஒன்றியக் குழு சிறப்பு கூட்டம் அதிமுக ஒன்றியக் குழுத் தலைவர் ரெஜினா நாயகம் தலைமையில் இன்று (13.12.2021) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு கூட்டம் தொடங்கி தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அப்போது பேசிய ஒன்றிய கவுன்சிலர் அறிவு சின்னமாயன் (திமுக), “தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் இக்கூட்டத்திற்கு அவர் தலைமை பொறுப்பை ஏற்கக் கூடாது. எனவே அவர் தலைவர் நாற்காலியை விடுத்து உறுப்பினர் வரிசையில் அமர வேண்டும்” என்றார்.
அதற்குப் பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், “நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு; அது நிறைவேற்றப்படவில்லை. அதனால் தற்போதைய நிலையில் அவர்தான் தலைவர்” என்று கூறினார்.
![Union leader shocked by ADMK councilors' silence!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Gg6OH3QfElb7y93VDXZnFbX2U3x08DDvFcVpTX09Wys/1639390462/sites/default/files/inline-images/th-2_613.jpg)
திமுக கவுன்சிலரின் இந்தக் கேள்விக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அதிமுக கவுன்சிலர்கள் அமைதி காத்தது தலைவர் ரெஜினா நாயகத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராஜதுரை (திமுக), “சிறப்புக் கூட்ட தீர்மானத்தில் குறிப்பிட்டது போல் மற்ற துறை சார்ந்த அதிகாரிகள் யாரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. யாரிடம் நாங்கள் கேள்வியைக் கேட்பது” என்று பேசினார். கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக, திமுக கட்சிகள் தங்கள் பகுதிகள் குறித்து கேள்வி எழுப்ப முயன்றனர். அப்போது, “இது சிறப்பு கூட்டம். எனவே தீர்மானம் சம்பந்தமாக மட்டும் பேசுங்கள்” என பி.டி.ஒ கிருஷ்ணன் பதிலளித்தார். கூட்ட முடிவில் மேலாளர் ராஜ்மோகன் நன்றி கூறினார்.