ஒன்றியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த இடைக்காலத் தடைக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
ஒன்றியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த இடைக்காலத் தடைக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு இன்று (01/07/2021) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதற்கு தடை விதிக்க முடியாது. பழனியைச் சேர்ந்த மனுதாரர் ராமசாமி தமிழக மக்களுக்கு எதனை கற்றுக் கொடுக்க விரும்புகிறார்? தடுப்பூசி எடுத்துக்கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது.
அப்படி இருக்கையில் இப்படித்தான் பேச வேண்டும் என எவ்வாறு உத்தரவிட முடியும்? முதல்வரும், மற்ற அமைச்சர்களும் இவ்வாறு தான் பேச வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட இயலாது என்று கூறிய நீதிபதிகள், ஒன்றியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த இடைக்கால தடைக்கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.