திருச்சி மருதாண்ட குறிச்சியில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மதியம் 12 மணியளவில் திருச்சி, கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இருந்து வந்த 15க்கும் மேற்பட்ட வருமானவரித் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ. 30 லட்சத்திற்கு மேலாகப் பத்திரப் பதிவு செய்தவர்கள் யார்? அவர்கள் வருமானவரி செலுத்தி இருக்கிறார்களா? என்று வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 20 மணி நேரமாக நடைபெற்ற வருமானவரித் துறை சோதனை இன்று நிறைவு பெற்றது. சோதனையின் போது ஐந்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் பத்திரப் பதிவு செய்ய வந்தவர்கள் எவ்வித தடையும் இன்றி பத்திரப் பதிவு மேற்கொள்ளப்பட்டது. திருச்சி, சென்னையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் மூலம் ரூ.1000 கோடிக்கு மேல் கணக்கு காட்டாதது தெரிய வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.