
திக்குவாய் என்பதால் மன உளைச்சலில் இளைஞன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருப்பூரில் நிகழ்ந்துள்ளது.
திருப்பூர் இரண்டாவது கேட் ரயில் தண்டவாளத்தில் 17 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அடிபட்ட நிலையில் உயிரிழந்து கிடப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அங்கு சென்ற ரயில்வே போலீசார் இளைஞரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் அந்த இளைஞனின் உடல் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அந்த இளைஞர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தது திருப்பூர் பலவஞ்சிபாளையம் மூகாம்பிகை தெருவை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் விமல்ராஜ் என்பது தெரியவந்தது.
இந்த தற்கொலைக்கான காரணம் குறித்த விசாரணையில் மாணவனின் வீட்டில் ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில் தனக்கு திக்குவாய் என்பதால் நண்பர்களுடன் சகஜமாக பேச முடியவில்லை. தனது பெற்றோர்களுக்கு எந்த வேலையும் செய்துகொடுக்க முடியவில்லை என்றும் உருக்கமாக எழுதியுள்ள விமல்ராஜ், 'எனது உயிரிழப்புக்கு யாரும் காரணம் இல்லை. ஐ லவ் யூ அம்மா, அப்பா, தங்கை, பாட்டி, நண்பர்கள்' என உருக்கமாக எழுதியுள்ளார். திக்குவாய் என்ற காரணத்திற்காக கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.